Monday, August 10, 2009

மாப்பிள்ளையின் யோசனை

கடந்த மாதம் எனது பழைய அலுவலக நண்பர் திருமணத்திற்க்காக இராமநாதபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றோம். இதைப் பற்றி கடந்த பதிவுகளில் சொல்லி இருந்தேன். திருமணம் அவர்களின் சடங்கு முறைப்படி நடைப்பெற்ற பின் 4 அல்லது 5 சிறுவர்கள் ஒரு புத்தகத்தை வினியோகித்தனர். புத்தகம் பெண்ணின் குடும்பப் பழக்கப் படி விநியோகிக்கப் பட்டதாக சொல்லப் பட்டது. நானும் வேகமாக சென்று ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். முதல் பக்கம் வைரமுத்து வரிகளுடன் ஆரம்பித்தது. எனக்கு ஒரே ஆச்சிரியம். கிராமத்து திருமண விழாவில் இப்படியும் ஒரு அறிவுத் தீனி என்று…மீன் குழம்பு, இறால் புட்டு செய்வது எப்படி என்றும், சிந்தனை மொழிகளும் இடம் பெற்று இருந்தன. ஆனால் அந்த கவிதைப் படித்த உடன் தான் எனக்கு சிறு சந்தேகம் ஏற்பட்டது. இந்த புத்தகம் விநியோகிக்க சொன்னது மாப்பிள்ளையோ என்று.... அப்படி என்ன கவிதை என்று யோசித்தால் இதோ...

ராதாகிருஷ்ணனே!
சாதாரண நாளல்ல
இன்று உனக்கு!
உன் வாழ்க்கைத் தேரோட்டத்தை
வெற்றியுடன் வழிநடத்த
கை பற்றிட வந்தவள்...
"ராமன் தேடிய சீதை"யாய்
உன் மனதை கைப்பற்றி வந்தவள்...

உழைப்பாளிகளால் புகழ்பெற்ற
களைப்பில்லா நகர்
சிவகாசியில்
தலைமகனாய்
பிறந்த உன்னை
தத்தெடுத்துக் கொண்டதோ
தலைநகர் சென்னை!

பள்ளிப் பருவத்திலே
தடகள ஓட்டத்திலே
கோப்பைகள் பல வென்றாய்!
ஆக்கி ஆட்டத்திலோ
கூக்கி நிறுத்தினாய் அணியை!
மட்டைப் பந்திலோ
தட்டிப் பறித்தாய் பலப்பல வெற்றிகளை!

இத்தனை திறமையிருந்தும்
சீட்டாடத் தெரியாது
உனக்கு!
இது நம்
ஆச்சி வீட்டுப் பரம்பரைக்கே
இழுக்கு!

அன்று
போதி மரம்தேடி
பாரயாத்திரை சென்றாய்!
தாத்தா பறக்கடையிலே
தவமாய் தவமிருந்தாய்!
இன்றோ
உலக அறிவு பெற்று
அமெரிக்காவரை
சென்று வந்தாய்
சொல்லியடிப்பதில்
நீ ஒரு கில்லி!
உன்னால்
மறக்க முடியாது "மல்லி"!


வீட்டுக்கு மூத்தவனாய்
பாரம் சுமக்கும்
உன் திறமை
அபாரம்!

நீ செல்லும் பாதையிலே
வெல்லும் பாதையிலே
தம்பிகளும் பின்தொடர்ந்தபடி!

"சாப்ட்வேர்" இஞ்சினியர் நீ...
கண்டிப்பு காட்டுவதிலோ
என்றும் ஹார்டுவேர்!

தமிழனுக்குத் தலைகுனிவென்றால்
பொறுக்காது உன் உள்ளம்!
பொங்கிடுமே
உணர்ச்சி வெள்ளம்!
போராடும் வேளையிலே
ராதா கிருஷ்ணனல்ல...
நீ ஒரு
"தாதா" கிருஷ்ணன்!

இத்திருமண நாளில்
நீ கடந்து வந்த பாதையை
சற்றே
திரும்பிப் பார்த்தது போதும்...

இனி உங்கள் இணையை
உங்கள் சாதனையை
திரும்பிப் பார்க்கட்டும் உலகம்!
வாழ்த்துகிறோம்
வைகை பொங்க!

இப்போது நீங்களே சொல்லுங்கள்... இதை படித்தவுடன் தான், எனக்கு ஒரு யோசனை... அது....????

No comments: