Showing posts with label மீனாட்சி அம்மன். Show all posts
Showing posts with label மீனாட்சி அம்மன். Show all posts

Thursday, April 14, 2011

கலவைகள்


அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
*************************************************

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய அரசு கண்டிப்பாக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட கூடாது. ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை. தென் தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக கருதுவது விலைவாசி ஏற்றம் மற்றும் மின்வெட்டு. அதை தவிர மக்கள் எதுவும் பெரிதாக நினைக்கவில்லை. 2G, இலங்கை தமிழர் பிரச்சனை, மற்றும் ஊழல் என்று எதுவுமே அவர்களுக்கு தெரிவதில்லை. மே 13ம் தேதி தமிழ் மக்களின் தலை எழுத்து தெரிந்து விடும்.
*************************************************
இந்த வருடத்தையும் சேர்த்து ஐந்தாவது வருடமாக, சித்திரை திருவிழாவை காண முடியவில்லை. விழா ஆரம்பம் ஆகி ஆறு நாட்கள் முடிந்து விட்டது. மதுரையை விட்டு வெளியே வேலை செய்யும் மக்கள் அனைவருக்கும் இருக்கின்ற, ஒரே எண்ணம் தான் தற்போது இதுதான். சொர்கத்துக்கும் ஈடாகத மதுரை முழுவதும், மக்கள் வெள்ளம். புதூரில் அல்லது அண்ணாநகரிலோ அழகரை பார்த்து திரும்பும் போது கிடைக்கும் நிம்மதி, எங்கு போனாலும் கிடைக்காது என்பது நிஜம். அழகரை காண கீழே உள்ள பாடலை பாருங்கள். இசை அமைப்பாளர் தேவா அவர்கள் செய்த நல்ல காரியங்களில் மிக முக்கியமாக நான் கருதுவது, இந்த பாட்டிற்கு இசை அமைத்தது தான்.



**************************************************************************
சமீபகாலமாக என் மீது எனக்கு படுபயங்கர கோபம். எனது சொந்த வேலைகளுக்குகாக செலவிடும் நேரத்தில் புத்தகம் படிப்பதை மறந்தேன், ருசியான சமையல் செய்வதை மறந்தேன், படம் பார்ப்பதும் குறைந்து போனது, சீக்கிரம் தூங்கும் நேரத்தை மறந்தேன். இத்தனைக்கும் காரணம் facebook தளம். பல விஷயங்கள் அறிந்து கொண்டாலும், நேரத்தை கொள்கிறது என்பதே நிதர்சனம். அதில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் முழுவதும் பார்க்காமல், அடுத்த நாளில் இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுகிறேன். முடியலே

**************************************************************************
கீழே உள்ள படத்தை பாருங்கள். இது என் வீட்டிற்கு அருகில் இருக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை. இந்த சாலைகளுக்கும் இடையில் குறைந்தது ஆறு லாரிகள் நிறுத்தலாம். சென்ற சனிக்கிழமை, ஒரு புறத்தில் இரண்டு கார்கள் சென்று கொண்டு இருந்தன. முதல் காரில் ஒரு வயதான அமெரிக்கா வெள்ளை நபர். இரண்டாவது காரில் ஒரு அமெரிக்கா வெள்ளை பெண்மணி.  முதல் கார் செய்த தவறால், இரண்டாவது கார் முதல் காரில் பின்னால் இடிக்க, முதல் கார் நிலை இழந்து,  ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலை சென்று அங்கு வந்துக் கொண்டு இருந்த ஒரு காரை இடித்தது. எந்த வித தவறும் செய்யாமல் மூன்றவதாக விபத்தில் சிக்கிய காரில் இருந்த நபர், அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். முதல் மற்றும் இரண்டாம் காரில் உள்ள நபர்கள் பிழைத்துக் கொண்டார்கள். இதில் கொடுமையான விஷயம், மூன்றாவது காரில் உயிர் இழந்த நபர் ஒரு இந்தியன். அதுவும் 26 வயது ஒரு வாலிபன். என் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாரம். இப்போது தான் அடுத்த வேலை கிடைத்து, அந்த ஊருக்கு செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தாரம். என் அலுவலகத்தில் முழுநேர தொழிலாளியாக பணிபுரிந்தால் எதோ ஒரு சில சலுகைகள் கிடைக்கும். அந்த நபரோ H1-B consultant. மற்ற வேலைகள் இப்போது எப்படி என்று என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. அவருக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் இந்தியாவில் இருக்கும் அவருடைய பெற்றோருக்கு என்னுடைய அனுதாபங்கள்.



Saturday, October 03, 2009

இந்தவாரம்: கேட்டது: ஐதீகம்

பல நூறு ஆண்டுகளுக்கு சில மனிதர்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக சில வரைமுறைகளை ஏற்படுத்தி உள்ளனர். அதை ஐதீகம் என்று ஏற்று அதையே நடைபடுத்தி கொண்டு இருக்கிறோம். ஆனால் மாற்றம் ஒன்று தான் இவ்வுலகில் மாறாமல் இருப்பது என்பதை நிருபிக்கும் வகையில் ஐதீகமும் மாறிக் கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு நான் கேட்ட சில முக்கிய நிகழ்வுகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த வருடம் கும்பாவிஷேகம் நடைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சித்திரை திருவிழா நடந்தது உலகம் அறியும். ஆனால் இந்து மதத்தின் ஐதீகப் படி நடைப் பெற்றது சரியானத என்பது கேள்வி. கும்பாவிஷேகம் நடைப் பெற்று 45 நாட்கள் அல்லது ஒரு மண்டலம் வரை எந்த விழாவும் நடக்க கூடாது என்பது முறையாம் (நான் கேட்டது வரை). சித்திரை திருவிழா நடைப் பெறவே கும்பாவிஷேக வேலைகள் வேகமாக முடிக்க பட்டன என்பது நிதர்சன உண்மை. வேதங்களை படித்தவர்கள், ஆன்மிக வாதிகள், பெரிய குருக்கர்கள் என்று பல பேர் இருந்தும் இதை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர் என்றால் அவர்கள் ஐதீகத்தை மதிக்க வில்லை என்று அர்த்தம்.

தகனதிரி செய்ய இப்பொழுது நடைமுறையில் மரக்கட்டையில் (சாதரண), மின்சார, மற்றும் எரிவாயு என்று மூன்று முறைகள் உள்ளன. இந்து மதத்தின் வழக்கப்படி சாதரண தகனம் தான் முறை. அது தான் நாம் முன்னோர்கள் சொன்னது. ஆனால் இப்போது யாரும் உபயோக படுத்துவது இல்லை. எரிவாயு முறை தான் எல்லா ஊர்களிலும் இருப்பது. குறிப்பிட்ட காரணங்களுக்காக ஐதீக முறைப்படி நடைப்பெறும் தகனத்தை, குருக்கர்கள் காசுக்காக அதுவும் நம் தொழில் அவசரத்தை தெரிந்து வைத்துக் கொண்டு தவறான முறையை கற்று கொடுக்கின்றனர். இந்த தவறான முறையே இப்போது தொடர்கிறது..

கிறித்தவர்கள் உடல்களை மண்ணில் புதைப்பது தான் வழக்கம் (பைபிளில் குறிப்பு உள்ளதாக கேட்டது). ஆனால் மக்கள் எண்ணிக்கை அதிகமா இருப்பதால், அரசு அவர்களுக்கான இடத்தை வழங்க முடியாததால் எரிவாயு தகனத்தை செய்ய அறிவுரை கூறுகிறது/வற்புறுத்துகிறது. அவர்களில் சில பேர் அப்படியே செய்து விடுகின்றனர். அப்படியானால் பைபிளில் கூறிய விஷயமும் பொய் தான என்ற கேள்வி சிறிது நாளுக்கு பிறகு வந்து விடும்.

குருக்கர்களே பயன்படுத்தாமல் இருக்கும் போது ஐதீகம் என்பது பொய் என்று நினைப்பு வந்து விடுகிறது. இதே நிலை தான் வேதத்துக்குமா?

Monday, February 09, 2009

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

மதுரையில் உள்ள முக்கியக் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. மதுரை மத்தியில் இக்கோவில் இருந்தாலும் ஒரே ஒருமுறை தான் சென்று உள்ளேன். இதோ அதன் சிறப்பு:

தல வரலாறு
மதுரையை ஆளும் மீனாட்சி ஆறுமாதமே பொறுப்பு வகிப்பாள். மாசி முதல் ஆவணி வரை அம்பிகை ஆள்வாள். திருமலை நாயக்கர் காலத்தில் மாசித்திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, சித்திரை முதல் ஆவணி வரை அம்பிகை பொறுப்பேற்று ஆட்சி செய்யும் வகையில் விழா மாற்றப்பட்டது. ஆவணி மூலத்தன்று மதுரையின் மன்னராக சுந்தரேஸ்வரர் பொறுப்பேற்பார். எச்செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே, பட்டாபிஷேகத்திற்கு முன்பு சுந்தரேஸ்வரரே ஒரு லிங்கத்திற்கு பூஜை செய்வார். இவ்வாறு லிங்க பூஜை செய்த அமைப்பில் இங்கு சிவன் காட்சி தருகிறார். அதாவது சிலை வடிவில் மீனாட்சியுடன் இருக்கிறார். இவர்களுக்கு முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. இப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம். ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இவர், "இம்மையிலும் நன்மை தருவார்' என்று அழைக்கப்படுகிறார்.

அதிசய சிவலிங்கம்
எந்தக் கோயிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவர். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.

வெள்ளை லிங்கம்
கோயில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார்.

கல் ஸ்ரீசக்ரம்
அம்பாள் மத்தியபுரி நாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர்.
திருமணமாகாதவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, "மாங்கல்ய வரபிரசாதினி' என்றும் பெயருண்டு.தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது. பொதுவாக செம்பில் ஸ்ரீசக்ரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்ரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

ராஜ உபசார அர்ச்சனை
சிவபெருமானே அரசராக முடிசூட்டிக் கொண்ட தலம் மதுரை. அதற்கு முன் இங்கு லிங்க பூஜை செய்தார். இதனடிப்படையில், தலைமைப்பொறுப்புள்ள பதவி கிடைக்கவும், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் சிவனுக்கு, "ராஜ உபசார அர்ச்சனை' செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

வருடத்திற்கு 54 அபிஷேகம்!
இக்கோயிலில் பூஜையின்போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.

தோசை நைவேத்யம்
திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை கள்ளழகர் கோயில், தோசை நைவேத்தியத்திற்கு பெயர் பெற்றது. இதேபோல் இங்கும் சிவனுக்கு தோசை படைக்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு விளாபூஜையின்போது தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர். மதுரையிலுள்ள பஞ்சகூடத்தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவக்குகிறார்கள்.

"சித்தர்' சிவன்
மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார். கல்வி, கலைகளில் வளர்ச்சி பெறவும், மன அமைதிக்காகவும் இவருக்கு பவுர்ணமி மற்றும் திங்கள்கிழமைகளில் சாம்பிராணி பதங்க (தைலத்திற்கு முந்தைய நிலை) காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்து வேண்டிக்கொள்கின்றனர். தை, சித்ராபவுர்ணமி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்
பொதுவாக சிவன் கோயில்களில் அவரது கணக்காளரான சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத்தலத்திலுள்ள சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்கிறார்கள். தீராத பிரச்னைகளிலிருந்து விடுபட சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை இவருக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், சண்டிகேஸ்வரர் தங்களது பிரச்னை தீர சிவனிடம் பரிந்துரை செய்வார் என்று நம்புகிறார்கள். எனவே இவரை பக்தர்கள், "பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்' என்று அழைக்கிறார்கள்.

காரமான புளியோதரை
இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பகசஷ்டி, மார்கழி அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். இவரது சன்னதிக்குள் வீரபத்திரர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். பைரவருக்கு ஒரு பங்கு அரிசியுடன், 3 பங்கு மிளகாய் வத்தல் சேர்த்து (ஒரு கிலோ அரிசிக்கு, 3 கிலோ மிளகாய் என்ற விகிதத்தில்) மிகவும் காரமான புளியோதரை செய்து படைக்கிறார்கள்.

முருகனுக்கு பூக்குழி திருவிழா
அம்மன் கோயில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவன் கோயிலில், அதுவும் முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.

ஜுரகர சக்தி
கோயில்களில் மூன்று கால்களுடன் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவரை பார்த்திருப்பீர்கள். ஆனால், ஜுரசக்தியை பார்த்திருக்க முடியாது. இவள் இக்கோயில் பிரகாரத்தில் இருக்கிறாள். அருகில் ஜுரகர லிங்கம் இருக்கிறது. உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் திங்களன்று ஜுரகர லிங்கம், ஜுரகர சக்திக்கு மிளகு ரசம், சாத நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

லிங்கோத்பவருக்கு "பாவாடை'
மத்தியபுரிநாயகி சன்னதிக்கு பின்புறம் அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ள பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, பாவாடை, தாலி கட்டி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

உதிரிப்பூக்கள்...
* "பூலோக கைலாயம்' என்றழைக்கப்படும் இத்தலம், மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.
* இங்கு அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
* சிவன், அம்பிகைக்கு ஊர் பெயர் அடிப்படையில் "மதுரநாயகர்', "மதுரநாயகி' என்றும் பெயருண்டு.
* பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.
* கோயில் வளாகத்தில் விபூதி விநாயகர் இருக்கிறார்.