Saturday, October 17, 2009

கி.மு.கி.பி - மதன்

வந்தார்கள் வென்றார்கள் என்ற புத்தகத்தின் மூலமாக வரலாற்றை நினைந்து பிரம்மித்துக் கொண்டு இருக்கும் வேளையில், அடுத்த பிரம்மிப்பு கி. மு. கி. பி என்ற புத்தக வாயிலாக... அனைவருக்கும் மனதில் பதியும் மாதிரியாக கொடுத்தது மதனின் சிறப்பு தான்...  இப்புத்தகத்தை பற்றி பலர் கருத்து தெளிவாக கூறி இருந்தாலும், என்னுடைய கருத்துகளையும் சேர்த்து ஒரு சேர இங்கே கொடுத்து உள்ளேன்...

450 கோடி ஆண்டுகளுக்கு முன் உலகம் தோன்றியதிலிருந்து புத்தகம் தொடங்குகிறது.

உலகின் முதல் மனிதன் ஒரு பெண் என்று வரலாற்று ஆதாரங்களோடு சொல்கிறார் ஆசிரியர். ஆப்பிரிக்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தோன்றிய மனித இனம் 3 லட்சம் ஆண்டுகளில் நடை பயணமாக உலகெங்கும் சென்று சேர்ந்திருக்கின்றது.

நாடோடியாகவே வாழ்ந்த மனிதர்கள் கிமு 8000ல் தான் பாலஸ்தீனில் ஜெரீகோ என்ற இடத்தில் முதன்முதலில் ஒரு குடியிருப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

நாகரிகத்தின் தோற்றத்தையும், அதன் பல்வேறு படிநிலைகளையும் விவாதித்துவிட்டு, பூசாரிகள், மன்னர்கள் தோன்றிய வரலாற்றையும் சொல்கிறார். கிமு 2334ல் மெசொபடேமியாவில் ஆட்சிக்கு வந்த 'ஸார்கான்' தான் உலகின் முதல் மன்னன் என்று சொல்லப்படுகிறான். 1764ல் பாபிலோனியாவில் மன்னனான 'ஹமுராபி' உலகின் முதல்பெரும் சக்கரவர்த்தி.

ஹமுராபியைப் பற்றி விளக்க ஆசிரியருக்குச் சில அத்தியாங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. உண்மைதான்! உலகின் முதல் பேரரசனின் அரசு அப்படிப்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது. உலகிலேயே முதன்முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்திய மன்னன் ஹமுராபி தான்.

'
கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்' என்பது ஹமுராபியின் சட்டங்களின் ஆதாரமாக இருந்தது. அடித்தவனுக்கு அடியே தண்டனை! கலப்படம் செய்தால் தண்டனை! கொள்ளை, கொலை, கற்பழிப்பு செய்தவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் மரண தண்டனை!

திருட்டுப்போன பொருளைக் காவல்துறை கண்டுபிடிக்காவிட்டால் அந்தப் பொருளின் இழப்பை அரசே ஈடு செய்தது. மேலும், குறிப்பிட்ட காவல் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இன்று வரை வேறெந்த அரசிலும் இப்படி ஒரு சட்டம் இருந்ததே இல்லை.

ஹமுராபியை தொடர்ந்து ஆட்சி செய்த அரசர்களைப்பற்றி சொல்லிவிட்டு இலக்கியத்தில் நுழைகிறார் ஆசிரியர். கிமு 2100ல் எழுதப்பட்ட கில்கெமெஷ் காப்பியம் இலியத், ராமாயண மகாபாரதங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.

பாபிலோனியர்களின் மத நம்பிக்கை பற்றி பேசும்போது நம் மனதைக் கவரும் ஒரு பாத்திரம் 'லிலித்'. இவள் பாதி பெண்ணாகவும் பாதி பறவையாகவும் நிர்வாணமாக அலையும் ஒரு செக்ஸ் தேவதை. கலவியின் போது தெறித்து விழும் ஆணின் உயிரணுக்களைக் கொண்டு சாத்தான்களை உருவாக்குவது அவள் வேலை என்று நம்பப்பட்டது.

நம்மைக் கவரும் இன்னொரு பாத்திரம் 'ஆமன் ஹோடப்' எனப்படும் 'ஆக்நெடான்' என்னும் மன்னன். ஓவியத்தில் உண்மயைச் சொல்லுங்கள் என்று கலைஞர்களுக்குக் கட்டளை இட்டவன் இவன். மதங்களில் நம்பிக்கை இல்லாமல் சூரிய வழிபாட்டை மேற்கொண்டவன்.

எகிப்தின் வரலாறு சொல்லும்போது, மன்னர்கள் தங்கள் இனத்தில் கலப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தங்கள் மகள்களையே மணந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

சற்று ஹரப்பா, மொஹஞ்சதாரோவைப் பார்வை இட்டுவிட்டு ஏதென்ஸின் வரலாறு சொல்லத்தொடங்குகிறார் ஆசிரியர். ஏதென்ஸ் மற்றும் பாரசீக நாடுகளின் சுகந்திர சண்டைகளை படிக்கும் போது ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த உணர்வுகள்... குறிப்பாக ட்ராய் அல்லது கிளடிநேட்டர் கண் முன்னால் இருப்பதாக ஒரு உணர்வு....இதில் தெரிந்த பல விஷயங்களையே குறிப்பிட்டுள்ளார். புது விஷயங்கள் என்றால், நல்ல நாகரிகம் பெற்றிருந்த கிரேக்கத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. பெண்கள் போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டனர். 'ஹோமோ செக்ஸில்' ஈடுபட்டவர்கள் அதிகம். சொல்லப்போனால் 'ஹோமோ செக்ஸில்' ஈடுபடாதவர்களுக்கு மதிப்பு இல்லை. 'மகிழ்ச்சிக்கு விலைமாதர்கள்; குழந்தைக்கு மனைவி; காதலுக்கு நண்பன்' என்று குறிப்பிடுகிறார் டெமஸ்தனிஸ்.

வரலாற்றின் தந்தை ஹெரோடோடஸ், மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேடஸ், நையாண்டி நாடகங்கள் எழுதிய அரிஸ்டோஃபனீஸ், தத்துவ ஞானிகள் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மாவீரன் அலெக்ஸாந்தர் பற்றியெல்லாம் பேசிவிட்டு இந்திய வரலாற்றில் நுழைகிறார் மதன்.

இந்தியாவின் முதல் பேரரசர் சந்திரகுப்த மௌரியர், சாணக்கியர், சந்திரகுப்தரின் மகன் பிந்து சாரர், அவரின் மகன் அசோகர் என்று வரலாறு சொல்லி மௌரிய வம்சம் கிமு 188ல் வீழ்ச்சி அடைவதோடு முடிக்கிறார்.

வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். 'வந்தார்கள்; வென்றார்கள்' முன்னுரையில் சுஜாதா சொல்வது போல, மதன் வரலாற்றுப்பாடங்களை எழுதினால் யார் வேண்டுமானாலும் நூற்றுக்கு நூறு வாங்கலாம்.

1 comment:

Anonymous said...

ayya arivu jeevikale Chandrakuptar indiyavin muthal chakravarthi theriyuma...
neenga 1764 -il thaan ulakin muthal chakravarthi endru soldreenga.. indiyavin Chandrakuptarin peran, Perarasar Asokar in Kalam Ki-mu 304