Saturday, October 17, 2009

பேராண்மை - திரைவிமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு த்ரில் ஆன மற்றும் நல்ல படத்தை பார்த்த மனதிருப்தி. கம்யூனிச கருத்தை நெற்றியில் அடித்தார் போல் கூறி இயக்குனர் திரு. ஜனநாதன் நல்ல சிந்தனைவாதி என்று மீண்டும் நீருபித்து இருக்கிறார்.

வெள்ளிமலையில் இந்திய அரசாங்கத்தால் விண்வெளிக்கு செலுத்த தயாராக இருக்கும் ஏவுகணையை வைத்து கதை ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் கொல்லிமலைக்கு கல்லூரி பெண்கள் என்.சி.சி. பயிற்சிக்காக வருகின்றனர்.  அவர்களுக்கு பயிற்சியாளராக அதே மலையில் தாழ்த்தபட்ட இனத்தில் பிறந்து படித்து ஜெயம் ரவி வன காவலராக பணிபுரிகிறார். அவருக்கு உயர் அதிகாரியாக தாழ்த்தபட்ட இனத்தை கேவலமாக நடத்தும் கதாபத்திரத்தில் பொன்வண்ணன். போலீஸ் அதிகாரிகள் எப்படி பட்டவர்கள் என்று தோலுரித்து காட்டுவது போல் அவரது பாத்திரம். ஐந்து பெண்களுடன் பயிற்சிக்காக காட்டிற்கு செல்லும் போது சர்வதேச தீவிரவாதிகள் ஏவுகணையை தகர்க்க வருவதை அறிந்து அவர்களை ஜெயம் ரவி அப்பெண்கள் உதவியுடன் எப்படி தகர்க்கிறார் என்பது கதை.


கதைப்படி இப்படத்தில் மூன்று கதாநாயகர்கள். மூவருக்கும் இணையான வேலை.
ஜெயம் ரவி: இவருக்கு இத்திரைப்படம் ஒரு மைல்கல். ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு/உழைப்பு தெரிகிறது. மலை ஏறுவது, பெண்களுக்கு பாடம் எடுப்பது, கோவணத்துடன் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து இருப்பது என்று வாழ்ந்து இருக்கிறார்.
இயக்குனர் ஜனநாதன்: ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் தன்னுடைய கம்யூனிச கருத்துகளை பொறித்து தள்ளுகிறார். உதாரணமாக இரண்டாம் பாதியில் "சொந்த நாட்டு மக்களை விரட்டி விட்டு, வெள்ளை காரங்களை விட போரிங்களா" என்று கொதிக்கிறார். இரண்டாம் பாதியில் கதை எடுத்து செல்லும் வேகம், த்ரில் உடன் கொடுத்த விதம், கொடுரமான கொலைகளை காட்டிய விதம், மலைகளை பற்றியும் வனவிலங்குகளை பற்றியும் நன்கு படித்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்த விதம் நல்ல இயக்குனர் என்று காட்டுகிறார்.
ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார்: கொல்லிமலை, ஒக்கனேகல் என்று பலவித மலைகளின் அழகை மேற்புரமாகவும், அடர்ந்த காடுகளையும் ஒவ்வொரு காட்சிகளாக வியக்கவைக்கிறார். தென் இந்தியாவில் கூட இவ்வளவு அழகான இடங்களை இருப்பதே தெரியாமல் இருப்பது பிரம்மிப்பான விஷயம் தான்.

ஐந்து அல்லது ஆறு கல்லூரி பெண்கள் சேர்ந்தால் அவர்களின் நடைமுறைகளை அபட்டமாக காட்டி இருக்கிறார். அவர்கள் பேசும் இரட்டை அர்த்த வசனமும் கேளியட்டங்கள் இளமை துள்ளல். அவர்களின் ஒருவருக்கு ஒருதலை காதல், மற்றும் அவர்களின் நாட்டுப் பற்று என்று சின்ன சின்ன உணர்வுகள் படத்தில் நிறைய உள்ளன.


இப்படத்துள் குறைகளே இல்லையா? ஏன் இல்லை... கல்லூரி பெண்கள் கனரக தூப்பக்கிகளை இயக்குவது, காட்டில் பயம் இல்லாமல் தனியாக ஓடுவது, தமிழ் கடவுளின் பெயரை சக்திகளாக காட்டுவது என்று சில விஷயங்கள் இருக்கின்றன. இருந்தாலும் படத்தின் வேகம் மற்றும் த்ரிலின் காரணமாக தெரியாமல் போய் விடுகிறது.

பேராண்மை: திரைஅரங்கில் மட்டுமே காணப்பட கூடிய த்ரில் ஆன நல்ல படம்.

No comments: