Wednesday, November 19, 2008

எம்என் நம்பியார்

நான் உயர்வாக மதிக்கின்ற நடிகர்களில், முக்கியமாக கருதபடுபவர் திரு. எம்.என்.நம்பியார். 19-நவம்-2008 தேதி அன்று இறைவடி சேர்ந்தார். அவருக்கு வயது 89.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.

வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆர், நம்பியார் இட்ட சண்டை காட்சிகள் பெரிதளவு பேசப்பட்டது என்பது உலக உண்மை. அதுவும் குறிப்பாக

நம்பியார்: மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்ஜிஆர்: சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்

என்ற வசனம் இன்றும் நாம் நினைவில் நிற்பது.

எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது. நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிபட்ட உலகமனிதர் இவ்வுலகை விட்டு பிரிந்து, சொர்க்கத்தை அடைந்து இருப்பார் என்று நம்பி, என் இரத்த கண்ணீரை துடைத்து கொள்கிறேன்.

No comments: