Wednesday, May 20, 2009

ஈழப் போராட்டம்-ஒரு பார்வை...!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே ஈழப் போராட்டம் இருந்தது என்றாலும் கூட பிரபாகரன் தலைமையில் நடந்த போராட்டமும், போர்களும்தான் உலக அளவில் ஈழம் குறித்த பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பின.

தமிழ்ப் புதிய புலிகள் என்ற அமைப்பை பிரபாகரன் தொடங்கியது முதல் இன்று வரை நடந்த ஈழப் போராட்டத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ...

1972: தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பை தொடங்கினார் பிரபாகரன்.

1976: தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பின் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாக உருமாறியது.

1983, 23 ஜூலை: யாழ்ப்பாணத்தில் ராணுவ வாகனங்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர், 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1985, 8 ஜூலை: பூடான் தலைநகர் திம்புவில் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முதல் முறையாக பேச்சுவார்த்தை நடந்தது.

1987, 29 ஜூலை: ராஜீவ் காந்திக்கும், ஜெயவர்த்தனேவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

1990, 24 மார்ச்: 1200 ராணுவ வீரர்களை இழந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை இந்தியாவுக்குத் திரும்பியது.

1990, ஜூன்: அமைதி ஒப்பந்தத்திலிருந்து விலகிய நிலையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த அதிரடித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான போலீஸாரை சுட்டுக் கொன்றனர் விடுதலைப் புலிகள்.

1991, 21 மே: இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்குப் பலியானார்.

1993, 1 மே: கொழும்பில் நடந்த மே தின கூட்டத்தில் அதிபர் பிரேமதாசா மனித வெடிகுண்டுக்குப் பலியானார்.

1995, ஜனவரி: சந்திரிகா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் ஒப்புக் கொண்டனர்.

1995, ஏப்ரல்: இரு கடற்படைக் கப்பல்களை குண்டு வைத்துத் தகர்த்தனர் விடுதலைப் புலிகள்.

1995, 2 டிசம்பர்: ஈழத் தமிழர்களின் கலாச்சார பெருமை கொண்ட நகரான யாழ்ப்பாணம், இலங்கை ராணுவத்திடம் வீழ்ந்தது.

1996, 31 ஜனவரி: கொழும்பின் மையப் பகுதியில் உள்ள மத்திய வங்கி மீது விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 1400 பேர் காயமடைந்தனர்.

1996, 24 ஜூலை: கொழும்பின் தெற்கில் உள்ள டெஹிவேலா என்ற இடத்தில் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட குண்டில் 70 பேர் பலியானார்கள்.

1996, 18 ஜூலை: முல்லைத்தீவில் உள்ள ராணுவ முகாமை விடுதலைப் புலிகள் தாக்கித் தகர்த்ததில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

1998, 25 ஜனவரி: கண்டியில் உள்ள புகழ் பெற்ற புத்த கோவிலான தலதா மலிகவா (புத்தரின் பல் இங்கு வைக்கப்பட்டுள்ளது) மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

1998, 26 செப்டம்பர்: கிளிநொச்சி ராணுவ முகாம் மீது நடத்திய புலிகள் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

1999, டிசம்பர்: விடுதலைப் புலிகளின் தாக்குதலிலிருந்து அதிபர் சந்திரிகா உயிர் தப்பினார். கண்ணில் கடும் சேதம்.

2000, ஏப்ரல்: யானை இறவை மீட்டனர் புலிகள். இலங்கைப் படைகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.

2001, ஜூலை: கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

2002, 22 பிப்ரவரி: நார்வே முயற்சியால் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும், பிரபாகரனும் தனித் தனியாக கையெழுத்திட்டனர்.

2002, டிசம்பர்: நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையின்போது அதிகாரப்பகிர்வுக்கு இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் ஒத்துக் கொண்டனர்.

2003 ஏப்ரல்: ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகியது விடுதலைப் புலிகள் இயக்கம்.

2004, 3 மார்ச்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பிரிவு தளபதியான கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன், புலிகள் இயக்கத்திலிருந்து விலகினார்.

2005, 12 ஆகஸ்ட்: வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொழும்பில் கொல்லப்பட்டார்.

2005, 4 டிசம்பர்: யாழ் வளைகுடாவில், இலங்கைப் படையினருக்கு எதிராக கண்ணிவெடி மற்றும் கையெறி குண்டுத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்தினர்.

2007, மார்ச்: விடுதலைப் புலிகள் தங்களது முதல் விமானத் தாக்குதலை நடத்தி உலகை அதிர வைத்தனர். கட்டுநாயகே விமானதளத்தின் மீது புலிகளின் விமானம் குண்டு வீசித் தாக்கியது.

ஏப்ரல் - 2வது முறையாக விமானத் தாக்குதலை நடத்தினர் புலிகள். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 9 முறை விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் புலிகள்.

2007, 15 ஜனவரி: கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய நகரான வாகரையை ராணுவம் பிடித்தது.

2007, 11 ஜூலை: கிழக்கில் இருந்த புலிகளின் கடைசி நகரான தொப்பிகலாவை ராணுவம் பிடித்தது. கிழக்கு மாகாணம் முழுவதும் ராணுவம் வசம் வந்தது.

2007, 2 நவம்பர்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2008, 2 ஜனவரி: ஜனவரி 14ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாக இலங்கை அரசு அறிவித்தது. அன்று முதல் புலிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியது.

2008, செப்டம்பர்: முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இருந்து செயல்பட்டு வரும் அனைத்து மனிதாபிமான குழுக்களும், வெளிநாட்டு ஊழியர்களும் வவுனியாவுக்கு செல்லுமாறு அரசு உத்தரவிட்டது.

2009, 2 ஜனவரி: பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது.

2009, 25 ஜனவரி: முல்லைத்தீவு நகரை ராணுவம் கைப்பற்றியது.

2009, 12 பிப்ரவரி: முல்லைத்தீவின் மேற்குப் பகுதியில் 12 கிலோமீட்டர் பகுதியை போரற்ற பகுதியாக இலங்கை அரசு அறிவித்தது.

2009, 20 பிப்ரவரி: கொழும்பில் விமானம் மூலம் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினர் விடுதலைப் புலிகள்.

2008 மார்ச்: வன்னிப் பகுதியை பிடிக்க ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

2009, 14 ஏப்ரல்: பேச்சுவார்த்தைக்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

2009, 20 ஏப்ரல்: 24 மணி நேரத்தில் சரணடைய வேண்டும் என இலங்கை அரசு விடுதலைப் புலிகளை எச்சரித்தது.

2009, 22 ஏப்ரல்: விடுதலைப் புலிகளின் முன்னாள் மீடியா ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர், மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜ் ஆகியோர் ராணுவத்திடம் சரணடைந்தனர்.

2009, 26 ஏப்ரல்: போர் நிறுத்தம் செய்வதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

2009, 27 ஏப்ரல்: தமிழகத்திலும், சர்வதேச அளவிலும் ஏற்பட்ட கடும் நெருக்கடியைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என இலங்கை அரசு அறிவித்தது.

2009, 16 மே: 3000க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்தது.

மே 18, 2009 - விடுதலைப் புலிகள் வசம் இருந்த கடைசி நிலப் பகுதியையும் பிடித்து விட்டதாகவும், அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது இலங்கை அரசு.

மே 19, 2009 - பிரபாகரன் கொல்லப்படவில்லை, அவர் உயிருடன், நலமாக இருப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது.

- நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, பிரபாகரன் மரணம் குறித்து எதையும் தெரிவிக்காமல் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

- ஆனால் ராஜபக்சே பேச்சை முடித்த சில மணி நேரங்களில் பிரபாகரனின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்த ராணுவம் அதுதொடர்பான வீடியோ படத்தையும் வெளியிட்டு தமிழ் உலகை அதிர வைத்ததது.

 

குறிப்பு: இப்பதிப்பு தட்ஸ்தமிழில் இருந்து எடுத்து போடப்பட்டது. தட்ஸ்தமிழ்க்கு என் நன்றி

No comments: