மாபெரும் நடிகர் திரு. எம்.என்.நம்பியார் மறைந்த சோகத்தை மறப்பதற்குள் மற்றொரு உயர்திரு நகைச்சுவை திலகம் திரு. நாகேஷ் மறைந்தது என்னை சோகக்கடலில் ஆழ்த்தியது.
நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன், சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறி சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார். சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை "கம்ப ராமாயணம்' நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது "வயிற்று வலி நோயாளி' வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். "டாக்டர்...' என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., "நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்' என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்."மேக்அப்' போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது.
தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. "தாமரைக்குளம்” இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்."திருவிளையாடல்" படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. "காதலிக்க நேரமில்லை" படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, "சியர்ஸ்' சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர். சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கையை நாகேஷ் பிரதிபலித்த அளவுக்கு வேறு யாராவது செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. அந்த அளவு பிரமாதமாக நடித்திருப்பார் நாகேஷ்.
எம்ஜிஆருடன்...
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரது பெரும்பாலான படங்களில் நடித்தவர் நாகேஷ். குறிப்பாக வேட்டைக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் என அவர் எம்ஜிஆருடன் நடித்த படங்களின் பட்டியல் மிகப் பெரியது. இடையில் சில காலம் இருவருக்கும் ஒரு பிரிவு வந்தாலும், மீண்டும் நாகேஷை அரவணைத்துக் கொண்டார் எம்ஜிஆர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நாகேஷுக்காகவே ஒரு பாத்திரத்தை உருவாக்கினார் அப்படத்தின் இயக்குநரான எம்ஜிஆர். குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி மிகவும் உடல் பாதித்த நிலையில் அவர் அதிலிருந்து மீண்டு வர உதவியவர் எம்ஜிஆர். 'அடுத்த ஏழு ஜென்மத்துக்கும் சேர்த்து இப்பவே குடிச்சேன். அதனால நான் பிழைப்பேனான்னே தெரியாத நிலை. ஆனால் மருத்துவர்களும் அண்ணன் எம்ஜிஆரும் எனக்கு புதுப்பிறவி கொடுத்துட்டாங்க' என்று ஒரு முறை கூறியிருந்தார் நாகேஷ். திரையுலகில் தாம் சம்பாதித்த செல்வத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்தார். ஆனால் பின்னர் பெரும் நஷ்டத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. தி.நகர் அவரது நாகேஷ் தியேட்டர் பிரச்சனையில் சிக்கிய போது பகையை மறந்து எம்ஜிஆர் அவருக்கு உதவி செய்தார்.
ரஜினி-கமல் யுகத்திலும்...
ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் மிகச் சிறந்த நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவில், நடிகர் நாகேஷாகவே வந்து அசத்தியிருப்பார். பின்னர் படிக்காதவன் படத்தில் ரஜினியின் வளர்ப்புத் தந்தையாக நடித்து நெகிழ்ச்சி தந்தார்.ஆனால் கலைஞானி கமலுடன் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நெருக்கம் இருந்தது, கடைசி வரை. கமல் ஹாசனின் பிற்காலப் படங்கள் அனைத்திலுமே நாகேஷுக்கு மறக்க முடியாத பாத்திரங்கள். அபூர்வ சகோதரர்கள் மூலம் ஒரு விதத்தில் நாகேஷின் பைனல் இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தவரே கமல்தான் என்றாலும் மிகையில்லை. மைக்கேல் மதனகாமராஜன், நம்மவர் என அந்தப் பட்டியல் தசாவதாரம் வரை தொடர்ந்தது. குறிப்பாக மகளிர் மட்டும் படத்தில் பிணமாக அவர் 'நடித்த' ஒரு காட்சியைப் பார்த்து ஹாலிவுட் நடிகர்களே வியந்துபோனதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கா விருது நாகேஷுக்குக் கிடைத்தது. இதோடு இல்லாமல் விஜயுடன் "பூவே உனக்காக", மாதவன் உடன் "மின்னலே" என தற்போது உள்ள நடிகர்களுடன் நடித்து திறமையை காட்டினர். இப்படிப்பட்ட மாபெரும் நகைச்சுவை நடிகரின் மறைவு திரைஉலகத்துகே, தமிழ் நாட்டுக்கே பெரும் இழப்பு. இப்படிபட்ட உலகமனிதர் இவ்வுலகை விட்டு பிரிந்து, சொர்க்கத்தை அடைந்து இருப்பார் என்று நம்பி, என் இரத்த கண்ணீரை துடைத்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment