Friday, November 02, 2012

கனடா - நிறைவு



மொண்ட்ரியல் (Montreal) - ஒட்டவா நகரத்தை விட பெரிய நகரம் மற்றும் பழமையானது என்றும், ரோமானிய மக்களால் அமைக்கபட்டது என்றதும், அழகாக இருக்கும் என்று கேட்டு, அதற்கு பயணம் ஆனேன். முதல் முறையாக கனடாவில் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். இரண்டு மணி நேரம் பயணம். நகரத்தை அடையும் போது பிரெஞ்சு மொழியின் ஆதிக்கம் தெரிந்தது. ஆம் எல்லா ஓட்டுன பலகைகளும், கடைகளின் பெயரும், பெயர் பலகைகளும் பிரெஞ்சு மொழியில். இரண்டு நிமிடம் ஆடி போய் விட்டேன் என்று கூற வேண்டும். முதலில் நான் செல்ல நினைத்த இடம், மவுண்ட் ராயல் பார்வை (view). கிட்டதட்ட இரண்டு மணிநேரம் போராடியும்,என்னால் அந்த இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியாக, டாக்ஸியை பிடித்து கொண்டு போனேன். வண்டி ஓட்டுனர் ஒரு பாகிஸ்தான். இவர் கனடா வந்து இருவது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்று அவர் வரலாற்றை பற்றி கூறி கொண்டே,மொண்ட்ரியல் பெருமையை செல்லி கொண்டே வந்தார். பிரெஞ்சு மொழி இல்லாமல் இவ்வூரில் வாழ முடியாது என்றும், அப்பகுதி மக்கள் ஆங்கிலத்தில் கேட்டால் உதவ மாட்டார்கள் என்று கூறினார். பிரெஞ்சு மொழியின் ஆதிக்கம் இங்கு தான் ஆரம்பம் ஆகிறது என்றும், அடுத்த நகரமான குபெக் ("Quebec") சென்றால் அந்த மக்கள் ஆங்கிலத்தை அறிய மாட்டார்கள் என்று கூறினார்.   நாங்கள் சென்ற மவுண்ட் ராயல் மலையில் இருந்து, அந்நகரத்தை முழுமையாக காண முடியும். அழகை ரசிக்க முடியும். அங்கு இருந்து  செயின்ட் ஜோசப்  ஓரடோரி ("Saint Joseph Oratory")  சென்று ஏசு நாதரை தரிசித்து விட்டு, பழைய மொண்ட்ரியல் இடத்திற்கு சென்றோம். அந்த இடம் முழுவதும், ரோமினிய கட்டிடங்களும், தெருக்களும்,கடைகளும் என்று அழகை ரசிக்க வைத்தன. இலையுதிர் காலம் என்பதால், நகரம் முழுவதும் ஆரஞ்சு நிறமாக காட்சி கொடுத்தது. இந்நகரிலும் எட்டு கனடிய டாலருக்கு, நகர் முழுவதும் ரயிலில் மற்றும் பேருந்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அதுவும் இந்த இடத்திற்கு இந்த பேருந்து/ரயில் வரும் என்று இருந்தால், அந்த நேரத்திற்கு கண்டிப்பாக வந்து சேரும் அளவிற்கு பொறுப்பான திட்டம் இருந்தது. ஒட்டவா நகரத்தை விட மக்கள் தொகை அதிகம் என்பதால், எங்கு சென்றாலும் பேருந்தில் கூட்டம். கனடாவில் குறிப்பாக டொராண்ட மற்றும் ஒட்டவாவில் இலங்கை தமிழ் மக்கள் அதிகம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணம் வரும் போது, பேருந்தில் இந்திய மக்களை காண முடிந்தது. அதே போல் முதலில் நான் சென்ற மவுண்ட் ராயல் பகுதியில், தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்ட பெயர் பலகை காண முடிந்தது. தமிழ் மக்கள் பிரெஞ்சு மொழியை படித்து விட்டு அங்கு வாழ்கிறார்கள் என்று பார்க்கும் போது, ஆச்சிரியமான விஷயம் தான்.






ஹிந்து கோவில் - ஒட்டவா: - வந்த வேலை நல்ல படியாக முடிந்ததே மற்றும் முடிந்தவரை எல்லா இடங்களையும் பார்த்தாகிவிட்டது, அதனால் கோவில் எங்கு இருக்கும் என்று தேடி ஒரு வழியாக  கண்டுபிடித்தேன். நான் தங்கி இருந்த இடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயணம். நான் செல்ல நினைத்த இடம் வைத்திஷ்வரம் கோவில். இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் கோவில். ஆனால் இந்த இடத்திற்கு பேருந்து இல்லை. அதனால் மற்றொரு ஹிந்து கோவிலுக்கு சென்றேன். பேருந்தில் இருந்து இறங்கி இருவது நிமிடம் நடக்க வேண்டும் அதுவும் நெடுந்தூர சாலையில். ஏன் தான் சென்றோம் என்ற நிலைமைக்கு வந்து விட்டேன். வடஇந்திய மக்களால் நடத்தப்படும் கோவில் என்பதால், அதன் அமைப்பும், பூஜைகளும் அவ்வாறே இருந்தன. மீண்டும் நெடுந்தூர சாலையில் நடக்க வேண்டும் என்ற போது, அங்கு உள்ள ஒரு நபரிடம் விசாரித்தேன். இப்போது இன்னொரு நபர் அவ்வழியில் செல்வதால், அவருடன் சேர்ந்து கொள்ளவும் என்று கூறி அனுப்பி வைத்தனர். என்னை பேருந்து நிலையத்தில் இறக்கி விடும் என்று உதவ வந்த பெரியவர் "சிவம் பரமேஸ்வரன்". கொச்சியில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, கனடாவில் ஐம்பது வருடமாக இருப்பவர். கோவில் நிர்வாகிகளில் அவரும் ஒருவர். என்னடா வந்து ஐந்து நாட்கள் ஆகி விட்டதே, இதுவரை தமிழ் பேசும் மக்களை பார்க்கவில்லையே என்ற எண்ணத்தை முடித்து வைத்தார். என்னை பற்றி நன்கு விசாரித்து, முன்பே தெரிந்து இருந்தால் என் வீட்டில் தங்கி இருக்கலாம் என்று கூறி ஒரு புத்துணர்ச்சி கொடுத்தார். அதே போல் அடுத்த முறை, ஒட்டவா வருவது என்றால் கண்டிப்பாக அவர் வீட்டில் தங்க வேண்டும் என்று கூறி, என் இடத்திற்கு செல்லும் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார். "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்பதை மீண்டும் ஒரு முறை நினைத்து கொண்டேன்.  


நான் கடந்த மூன்று ஆண்டுகளில்,பல பயணத்தில் ஈடுபட்டு உள்ளேன். ஆனால் இந்த கனடா பயணம் சிறந்த பயணமாகும். ஒரு வேலை நான் தனியாக வந்து, பல இடங்களையும் பல புது மனிதர்களையும் பார்த்தால் கூட இருக்கலாம். நான் மீண்டும் கனடா வருவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. அதனால் இந்த இந்த பயணம் எனக்கு ஒரு மைல் கல் ஆகும்.

No comments: