Thursday, November 01, 2012

கனடா


பள்ளி வயதில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வாரம் ஒருமுறை சென்னையை பற்றி போடும் போது, சென்னைக்கு எப்போது சொல்வோம் என்று இருக்கும். அதற்கு காரணம், அந்த நிகழ்ச்சியை  கொடுக்கும் விதம் தான் என்று சென்னைக்கு வந்த பின் தான் தெரிந்தது. அதே போல் அமெரிக்கா மீதான கனவு கூட எப்போதவது வரும். கணிபொறி துறையில் வேலை பார்க்கும் காரணத்தால் என்னவோ, அமெரிக்கா மீது மோகம் வந்து என கூறலாம். சிறிது நாட்கள் செல்ல, அமெரிக்காவின் மோகத்திற்கு காரணம் டாலர் என்று தெரியவந்தது. அமெரிக்கா வந்தபின் இங்கு இருக்கும் மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் என்று அறிய முடிந்ததது. இவர்களும் நம்மூர் மக்களை போல தான். ஒரே ஒரு வித்தியாசம் நம் மக்கள் சொந்த வாழ்க்கையை பற்றி இளம் வயதில் யோசிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் இவர்கள் நாற்பது வயதை தொட்ட உடன் தான், சொந்த வாழ்க்கையை பற்றி சிந்திப்பார்கள். என்னுடன் வேலை பார்க்கும் சில மக்களுடன் பேசும் போது, அவர்களும் சொந்த மாநிலத்தை தவிர எங்கும் சென்றது கிடையாது என்று கேள்வி பட்டேன். ஆனால் நம்மூர் மக்கள் தான், இங்கு வந்தவுடன் கிழக்கில் இருந்து மேற்கும், தெற்கில் இருந்து வடக்கும் என்று அனைத்து இடங்களையும் பார்க்கின்றனர். இதே மக்கள் நம் நாட்டில், தன்னுடைய சொந்த மாநிலத்தை தாண்டி இருக்க மாட்டார்கள். ஆக மொத்தத்தில், பயணம் சென்று பார்க்கும் போது உலக மக்கள் எல்லோரும் ஒன்று தான். வேலை விஷயமாக செல்லும் இடத்தில் மட்டுமே இந்த சுற்றுலா திட்டம் அமைகிறது. 

கனடா - நான் ஒரே ஒரு முறை செல்ல நினைத்த நாடு. ஆம், அமெரிக்காவில் உள்ள
 நயாகரா நீர் வீழ்ச்சியை காணும் போது, கனடாவில் இருந்து பார்த்தால் இதை விட நன்றாக இருக்கும் கூறும் போது, நாம் ஏன் கனடா சென்று பார்க்க கூடாது என்ற எண்ணம் வந்தது. ஆனால், அதற்கு நான் தாயராக இருந்தாலும், என்னுடன் வந்த நண்பர்களின் அமெரிக்கா சென்று வரும் உத்தரவு தாள்களில் ஏதே பிரச்சனை என்பதால், கனடாவின் கனவு அங்கேயே கொல்லப்பட்டது. இதற்கு மேல், நாம் எங்கே பிற நாடுகளுக்கு செல்ல போகிறோம் என்று நினைத்து இருந்த வேளையில், எனக்கும் ஒரு வாய்ப்பு வர நானும் கனடா செல்ல ஆயுத்தம் ஆனேன். இதில் பெரிய கொடுமை நான்  தனியாக செல்லவது தான். கனடாவும் அமெரிக்காவை போல தான் என்று கூறி என்னை நானே சமாதனம் செய்து கொண்டேன் என்பது தான் உண்மை. 

ஒட்டவா - கனடாவின் தலைநகரம். நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அரசு அருங்காட்சியகம் மற்றும் மற்ற நாடுகளின் தூதரகங்கள் என்று அனைத்தும் அரசு சம்மந்தபட்ட அலுவலகங்கள். ஏற்கனவே நான் அமெரிக்காவின் தலை நகரமான வாஷிங்டான் டி.சி. சென்று நான் வெறுத்து போயிருந்தேன். காரணம் எங்கு சென்றாலும் அருங்காட்சியகம். வெள்ளை மாளிகை மட்டும் தான் பார்க்க வேண்டிய இடமாக இருந்தது. ஆனால் வெள்ளை மாளிகையை ஒரு மைல் தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும். அதனால் கனடாவின் தலைநகரம் சென்றால் இதே பிரச்சனை இருக்கும் நினைத்த என் எண்ணத்தை தவறு என்று நீருபித்தது இந்த ஒட்டவா. நான் சென்ற காலம் இலையுதிர் காலம் என்பதால் அனைத்து மரங்களும் ஆரஞ்சு நிற இலைகளுடன் நகரை மிக அழகாக காட்டியது. அதே போல் நான் தங்கி இருந்தது மத்திய நகரத்தில் என்பதால் நம்மூர் போன்ற பொது பேருந்துகளை நகரம் முழுவதும் பார்க்க முடிந்தது. ஆனால் பொது பேருந்துகளை இவ்வளவு அழகாக பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை இங்கு பார்த்து தான் அறிந்து கொண்டேன். எளிய மக்களின் வாழ்க்கை முறை இங்கு ப்ய்வர்ட் மார்க்கெட்ல் பார்க்க முடிந்தது. ஆம், மதுரையில் உள்ள தெற்குவாசல் மார்க்கெட் போல தான் இங்கும் ப்ய்வர்ட் மார்க்கெட். ஆனால் இங்கு இந்த மக்களின் வாழ்க்கை முறை படி அனைத்தும் மிக அழகாக வைத்து விற்க பட்டு கொண்டு இருந்தது.  நாடாளுமன்றத்தில் உள்ளே செல்லும் அனுமதியும், இங்கே இருக்கும் சுற்றுலா மக்களுக்கு. பக்கத்தில் சென்று அதன் அழகை ரசிக்கும் திருப்தி எனக்கு கிடைத்தது. அதே போல் உச்சநீதிமன்றத்தையும் நாம் போய் பார்க்கலாம். நான் என்னுடைய வேலைக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் நாடாளுமன்றத்தை தாண்டியாக வேண்டும். முதல் நாளில், சென்று திரும்பும் போது, நாடாளுமன்றம் வாயிலில் பேருந்து நிற்கும் இடத்திற்கு அருகில் வரும் போது என்னையும் சேர்ந்து மொத்தம் ஐந்து பேர் மட்டுமே நாடாளுமன்றம் வாயிலில் நிற்கிறோம். தீடிர் என்று இருபதற்கும் மேலான காவல் துறையினர் இரண்டு சக்கர வாகனத்தில் வரிசையாக வந்து நின்றனர். நான் நின்று இருந்த இடத்திற்கு அருகில் அனைத்து வானகங்களையும் ஒரு நிமிடத்தில் காலி செய்து விட்டனர். அடுத்த நிமிடத்தில் வரிசையாக எட்டு கார்கள் எங்கள் அருகில் சென்றன. கனடாவின் பிரதமர் என்று நினைக்கிறேன். பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. கனடாவின் பிரதமர் என் அருகில் காரில் போகிறார். மீண்டும் ஒரு நிமிடத்தில் பழைய படி போக்குவரத்து சரியானது. ஒரே ஒரு முறை தமிழ்நாட்டை நினைத்து பார்த்தேன். 







மொண்ட்ரியல் - பிரான்ச் பேசும் மக்களின் ஆதிக்கம் இங்கு இருந்து தான் ஆரம்பம் ஆகிறது. 
நாளை தொடரும்...

No comments: