Sunday, January 18, 2009

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்

தல வரலாறு: சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி, இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில் லிங்கம் இருந்த இடத்தைச் சுற்றி புற்று வளர்ந்து, வேல மரங்களால் சூழப்பட்டது. பொம்மி என்பவர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், இங்கு லிங்கம் மறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். உடனடியாக லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. பெரிய கோட்டையுடன் அவர் கோயில் எழுப்பினார். இந்த இடம் நீரால் சூழப்பட்டிருந்ததால் சிவனுக்கு, "ஜலகண்டேஸ்வரர்' என்று பெயர் சூட்டப்பட்டது. பக்தர்களின் உடல், மனதில் ஏற்படும் பிணிகளை நீக்குபவராக அருளுவதால், "ஜுரகண்டேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
பல்லிகளின் சிற்பம்: சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் இக்கோயில் சுவரில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களும், பல்லி விழுந்ததால் தோஷம் என நம்புபவர்களும் சிவனை வணங்கி இவற்றையும் வணங்கிச் செல்கிறார்கள்.
தினமும் திருமஞ்சனம் : சிவன் சன்னதிக்கு பின்புறம் திருப்பதி வேங்கடேசர் சன்னதி இருக்கிறது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்த மூர்த்தியை பிரதிஷ்டை செய்துள்ளனர். சுவாமியின் பாதத்தில் 11 சாளக்கிராம கற்கள் உள்ளன. புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு மகாபிஷேகம் நடக்கும். இவருக்கு தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்கின்றனர்.
விளக்கிற்கு நைவேத்யம் : கோயில்களில் சுவாமிகளுக்கு நைவேத்யம் படைத்து பூஜை செய்வது தெரியும். இங்கே, விளக்குகளுக்கும் நைவேத்யம் உண்டு. அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னதி எதிரில் ஒன்பது தீபங்கள் உள்ளன. இவற்றை நவசக்திகளாக கருதி, சுத்தான்ன நைவேத்யம் மற்றும் சிறப்புபூஜையை வெள்ளிக்கிழமைகளிலும், தமிழ் மாத பிறப்பன்றும் படைக்கப்படுகிறது. மேளதாளத்துடன் விசேஷ பூஜையும் நடக்கும்.
பார் புகழும் கோட்டை : அரசர் பொம்மி, சிவனுக்கு கோயில் எழுப்பியபோது, 2 ஆயிரத்து 500 அடி நீளம், ஆயிரத்து 500 அடி அகலத்துடன் பிரமாண்டமான கோட்டையைக் கட்டினார். இக்கோட்டையின் அமைப்பு வியக்கும்படியாக உள்ளது. கோட்டையைச் சுற்றிலும் 25 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிறைந்த பெரிய அகழி இருக்கிறது. இக்கோட்டை வேலூருக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
கால சம்ஹாரமூர்த்தி : மூலஸ்தானத்தில் ஜலகண்டேஸ்வரர் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். இவருக்கு பக்தர்கள் ருத்ராபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். காலசம்ஹார மூர்த்தி உற்சவராகக் காட்சி தருகிறார். ஆயுள்விருத்தி பெற, விபத்து பயம் நீங்க இவருக்கு ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள். அறுபது, எண்பதாம் திருமணங்களும் (சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்)நடக்கின்றன. பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க, தாங்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தி விட்டு புது மாங்கல்யம் அணியும் பிரார்த்தனையும் உண்டு.
கங்கை தீர்த்தம்: பிரகாரத்தில் ஒரு கிணறு உள்ளது. இதிலுள்ள நீரை கங்கை தீர்த்தமாக கருதுகின்றனர். கிணற்றின் அருகில் "கங்கா பாலாறு ஈஸ்வரர்' என்ற பெயரில் சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் இந்த கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதன் பாணம் கூம்பு வடிவில் இருப்பது சிறப்பான அமைப்பு. லிங்கத்தின் பின்புறம் பைரவர் இருக்கிறார். காசியில் உள்ளது போல, சிவலிங்கம், கங்கா தீர்த்தம், பைரவர் என மூன்றையும் தரிசிக்கலாம். எனவே, இந்த சன்னதியை, "வேலூர் காசி' என்று அழைக்கிறார்கள்.
முத்தேவியர் தரிசனம்: சிவன் சன்னதிக்கு இடப்புறம், ருத்ராட்ச பந்தல் வேய்ந்த அகிலாண்டேஸ்வரி சன்னதி இருக்கிறது. இந்த சன்னதிக்கு வெளியேயுள்ள மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோர் அருகருகில் காட்சி தருகின்றனர். ஒரே சமயத்தில் கலைமகள், திருமகள், மலைமகள் தரிசனம் இங்கு கிடைப்பது விசேஷம்.
கலையம்ச கல்யாண மண்டபம் : கோயில் வளாகத்தில் வித்தியாசமான சிற்பங்களுடன் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபம் இருக்கிறது. வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர், சிவமூர்த்தங்கள், கண்ணப்பர் வரலாறு, பெருமாளின் தசாவதாரம், நரசிம்மரின் பாதம் அருகில் வணங்கியபடி கருடாழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், யோகாசனம் செய்யும் மகரிஷி, மேல் விதானத்தை தாங்கும் கிளிகள், தேவலோகப்பெண்கள் என கண்ணைக்கவரும் சிற்பங்களை வடித்திருக்கின்றனர். இவற்றின் அழகில் லயித்த ஆங்கிலேய தளபதி ஒருவர் இந்த தூண்களைப் பெயர்த்துச் செல்ல விரும்பினார். தூண்களின் வரிசை மாறக்கூடாது என்பதற்காக எண்களையும் பொறித்தார். மண்டபத்தை பெயர்த்துச் செல்ல கப்பலையும் வரவழைத்தார். ஆனால், அக்கப்பல் வழியிலேயே கடலில் மூழ்கி விட்டது. எனவே, அவர் திட்டத்தைக் கைவிட்டார்.

2 comments:

Partha said...

nice post!
anga irukara sirpangalla oru special sirpam onnu iruku... oru pakkathulenthu paartha kalai mathiriyum, innoru pakkathulenthu paartha yaanai mathiriyum theriyara sirpam onnu.. paatheengala??

suthi irukura kottaiya pathi onnum ezhuthaliye? athu mela pogarthuku oru chinna vazhi irukum.. angenthu nalla view kidaikum...

4yrs irunthen vellore la :)

BadhriNath said...

நீரால் சூழப்பட்டிருந்ததால் சிவனுக்கு, "ஜலகண்டேஸ்வரர்' என்று பெயர்
jorathaala suuzap patta thaane appo : ஜுரகண்டேஸ்வரர். Appadi illena

உடல், மனதில் ஏற்படும் பிணிகளை நீக்குபவராக அருளுவதால், "ஜுரகண்டேஸ்வரர்' then ஜலகண்டேஸ்வரர் means removing water. Yean pa sivanukkellam punai peyar vekkareenga. Futurela adhuve pera ninnudum.. Then some athesit will say this is not the old temple but a diff jurakandeswarar temple and ayodhya will happen in vellore :) Far fetched, but too risky to do all these....

And partha, when you say "4yrs vellorela irundhen" please clarify ;)