Tuesday, December 04, 2012

22 பிமேல் கோட்டயம் - 22 Female Kottayam - திரைவிமர்சனம் - மலையாளம்



வெளியில் சென்று வேலை செய்யும் பெண்கள் சமூகத்தில் எப்படி ஏமாற்ற படுகிறார்கள். அதே போல் எப்படி அவர்கள் அதை துடைத்து எறிந்து விட்டு, வாழ்க்கையில் பயணிக்கிறார்கள் என்பதை காட்டும் இரண்டாவது படம் 22 பிமேல் கோட்டயம் (22 Female Kottayam). சமூகத்தில் எங்கு எல்லாம் தப்பு செய்தால், சிக்கிக்கொள்ள மாட்டோம் என்று தெரிந்து கொண்டு, அங்கு தப்பு செய்பவர்களிடம் சரியாக வந்து மாட்டி கொள்வது தான் தலைவிதி. அந்த இடத்தில் சிக்கி கொள்ளும் பெண்ணின் கதை தான் இப்படம்.



பெங்களூரில் ஒரு தனியார் மருத்துவத்துறையில் வேலை பார்க்கும் பெண்ணாக ரீமா கல்லிங்கள். கனடா சென்று வேலை பார்க்கும் லட்சியத்துடன் இருக்கும் ஒரு மலையாள பெண். கனடா செல்வதற்கு தேவையான விசா நடைமுறைகளை செய்து தரும் ஒரு தனியார் நிறுவனத்திற்க்கு செல்ல அங்கு பாசிலை காண்கிறாள். இருவருக்கும் காதல் வர, ஒரே வீட்டில் குடி இருக்கின்றனர். காதல் காரணமாக இருவரும் உடலோடு சேர்கின்றனர். பாசிலின் மேல் அதிகாரியாக பிரதாப் போத்தன். ஏதே ஒரு பிரச்சனையில் பாசில் தலை மறைவாக, வீட்டில் தனியாக இருக்கும் ரீமை, பிரதாப் வன்மையாக புணர்கிறார். ரீமா எந்த பிரச்சனையும் வேண்டும் என்று கூற பாசிலும் பிரதாப்பை விட்டு விடுகிறார். காரணம் கனடா செல்ல விரும்பும் பெண்கள், காவல் நிலையத்தில் முதல் அறிக்கை பதிய மாட்டார்கள். அப்படி பதிவு செய்தால், அவர்கள் எந்த ஊருக்கும் செல்ல இயலாது. சில நாட்களில் ரீமா உடல் நலம் தேறி வர, பாசில் பிரதாப்க்கு ஒரு செய்தி அனுப்புகிறார். ரீமா உடல் நிலை சரியாகி விட்டது என்று. அந்த நிமிடம் தான் பிரதாப் மற்றும் பாசில் இருவரும் சேர்ந்தே இந்த வேலை செய்கின்றனர் என்று நமக்கு தெரிய வருகிறது. மீண்டும் அதே வீட்டில் நீமா தனியாக இருக்கும் போது, பிரதாப் வந்து மறுபடியும் புணர்கிறார். இப்போது ரீமா பிரதாப்பை பழி வாங்க வேண்டும் என்று பாசிலிடம் கூற, பாசில் மற்றும் பிரதாப் இருவரும் சேர்ந்து ரீமாவை போதை வழக்கில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்புகின்றனர். சிறையில் ஒரு தமிழ் பெண்ணின் நட்பு கிடைத்து, பாசில் மற்றும் பிரதாப்பின் பின்னணி பற்றி தெரிந்து கொள்கிறாள். பழி வாங்க வேண்டும் என்ற உணர்ச்சி மேலோங்க, தமிழ் பெண்ணிடம் உதவி கேட்கிறாள். சிறையில் இருந்து வெளியே வந்து, சில பேரின் உதவியுடன் இருவரையும் வித்தியாசமாக பழி தீர்த்து, தன் லட்சித்தியத்தை நோக்கி பயணிக்கிறாள்.


கதை என்று பார்த்தால், பழி வாங்கும் பெண் என்று வந்தாலும், திரைக்கதை கொடுத்தவிதம் விதம் தான் படத்தை உயர்த்தி விடுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் எதாவது ஒரு விதத்தில் முக்கிய பங்களிப்பு கொடுப்பதாக அமைக்கபட்டு இருக்கும். குறிப்பாக சிறையில் சந்திக்கும் தமிழ் பெண்ணின் கதை, மற்றும் அவள் கொடுக்கும் யோசனைகள் என்று அப்பெண்ணின் கதாப்பாத்திரத்தை உயர்த்தி காட்டி இருப்பார் இயக்குனர். அதே போல் வசனங்களுக்கு இப்படத்தில் முக்கிய இடம் உண்டு. பிரதாப் ஏதோ காபி கேட்பது போல், உடலுறவு உன்னுடன் வைத்து கொள்ளவா? என்று கேட்பதும், தமிழ் பெண், குழந்தையை தான் காப்பற்ற வேண்டும் என்று சொல்லும் இடங்கள் ஆகட்டும், வசன இயக்குனர் இப்படத்தில் நின்று விடுகிறார். பச்சைக்கிளி முத்துசாரம் படத்தை பார்த்த பின், சென்னையில் தினசரி புறநகர் இரயிலில் பயணம் கொள்ளும் ஆண்கள் பல பேர், யோசித்ததாக ஒரு தகவல் உண்டு. அதே போல் தான் இப்படமும், வேலைக்கு செல்லும் பெண்களை கண்டிப்பாக ஒரு முறை சிந்திக்க வைக்கும்.  


வாழ்க்கையில் பிரச்சனைகள் எப்படி, எங்கு இருந்து வரும், யாரால் வரும் என்பதை சிந்திக்க இயலாது. வந்தால் முடிந்தவரை சரி செய்து விட்டு, நம் பயணத்தை தொடர வேண்டியது தான்.

2 comments:

Thava said...

விமர்சனம் அருமையா இருக்கு..படத்தை பார்க்க தூண்டுகிறது.நன்றி.
http://kumaran-filmthoughts.blogspot.com/2012/11/color-of-paradise-1999.html

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

Thanks Kumaran