Thursday, May 24, 2012

பெட்ரோல் - மரண அடி என்பது இது தானா?

சிறு வயதில் நான் கண்ட அரச பெரிய நெடுந்தொடர்களில் , மன்னர் கொடுமையான வரிகளை போடுகிறார் என்றும், அதனால் மக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று பார்த்து இருக்கிறேன். அதே போல் இப்போது இந்தியாவில் நடக்கிறது என்பது தான் நிதர்சனம். அப்போதைய நிலைமையை நாம் பார்க்கும் மற்றும் படிக்கும் நிலைமை போல், நம்முடைய நிலைமையை எதிர்கால மக்கள் இப்படி தான் பேசுவார்கள் என்று நினைக்கிறேன். உதாரணமாக பெட்ரோல் விலையை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது. பெட்ரோலின் முக விலை 40 என்று எடுத்துக் கொண்டால், நாம் கொடுக்கும் தொகை 78 . வித்தியாச தொகை அனைத்தும் பலவகை வரிகள்.

(நன்றி: புதிய தலைமுறை) தற்போதைய நிலவரப்படி சுமார் 159 லிட்டர்களைக் கொண்ட 1 பேரல் கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் 5 ஆயிரத்து 110 ரூபாயாகும். அதன் படி ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் 32 ரூபாய் 13 காசுகள். கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படும் போது பெட்ரோலுடன், டீசல், மண்ணெண்ணெய், நாப்தா, தார் போன்றவை கிடைக்கிறது. அவையும் எண்ணெய் நிறுவனங்களால் காசாக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் விலை சுமார் 38 ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் மீது மத்திய அரசு கலால் வரியாக சுமார் 15 ரூபாய் விதிக்கிறது. அடிப்படை விலையில் கச்சா எண்ணெய் மீது 5 சதவீத சுங்க வரியும், பெட்ரோல் மீது ஏழரை சதவீத சுங்க வரியும் வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசு 30 சதவிகித வாட் வரி விதிக்கிறது. பெட்ரோல் பங்க் முகவர்களுக்கு ஒரு லிட்டர் 1 ரூபாய் 45 காசுகள் கமிஷன் வழங்கப்படுகிறது. போக்குவரத்து கட்டணமாக சுமார் 7 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கல்வி வரியாக கலால் வரியில் இருந்து 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று40 ரூபாய் அளவுக்கு அடுக்கடுக்காக வரி விதிக்கப்படுவதாலேயே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாய் 53 காசுகளாக சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

காங்கிரஸின் கடந்த ஆட்சியில் 22 முறையும், ஆளுகின்ற ஆட்சியில் 16 முறையும் பெட்ரோல் விலை ஏறி உள்ளது. விலை மாற்றத்தின் பட விளக்கம் இங்கே.

(நன்றி: mypetrolprice.com)


மற்ற நாடுகளை ஒப்பிடும் போதும் கூட இந்தியாவில் தான் அதிகமாக பெட்ரோல் விலை இருக்கிறது. சில அறிவு ஜீவிகள் வெளிநாடுகளில் அமர்ந்து கொண்டு, இந்தியாவில் இருக்கும் நிலைமை குறித்து தெரியாமல், அனைத்தும் தெரிந்தார் போல் பேசி வருகின்றனர். எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை. தான் சொல்வது தான் சரி என்ற எண்ணம் தான் காரணம். நான் படித்த விலை பட்டியல் விவரங்கள் இங்கே.

(நன்றி: புதிய தலைமுறை) நமது அண்டை நாடான பாகிஸ்தானில் லிட்டர் பெட்ரோல் 59 ரூபாய்தான். இலங்கையில் 61 ரூபாய் 70 காசுகளாகவும், சீனாவில் 72 ரூபாய் 10 காசுகளாகவும் உள்ளது. வங்கதேசத்தில் 43 ரூபாய் 40 காசுகளாகவும் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. உலகிலேயே மிகவும் விலை குறைவாக சவுதி அரேபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 5 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மிக அதிகபட்சமாக நைஜீரியாவில் 181 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் லிட்டர் பெட்ரோல் விலை 53 ரூபாய் 70 காசுகளாகவும், ரஷ்யாவில் 50 ரூபாய் 20 காசுகளாகவும், பிரிட்டனில் 101 ரூபாய் 10 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக மக்கள் எவ்வளவு அடி கொடுத்தாலும் தங்குவார்கள், திரும்பி ஒரு கேள்வி கூட கேட்க மாட்டார்கள் என்பது உலக உண்மை. இலங்கை விவகாரம் வைத்தே, தமிழக மக்கள் எப்படி பட்டர்கள் என்பதையும், தமிழக அரசியல்வாதிகள் எப்படிபட்ட சுயநலம் என்பதையும் கண்டு கொள்ளலாம். ஆனால் தமிழன் மட்டும் அல்ல இந்தியனும் அதே வகை சேர்ந்தவர்கள் என்பதை இந்த பெட்ரோல் விலை ஏற்றத்தை வைத்தே சொல்லி விடலாம்.

வாழ்க ஜனநாயகம்...

1 comment:

பாண்டியராஜ் துரைராஜ் said...

மிகவும் அருமையான தொகுப்பு !!!