Tuesday, April 26, 2011

The Silence of the Lambs – 1991 - ஆங்கிலம்



சிவாஜி கணேஷன் அவர்கள் நடித்த கர்ணன் படத்தில் ஒரு காட்சி. என்.டி. ராமராவ் மற்றும் சகுனி கதாபாத்திரம் அவையில் பேசும் போது, "பாம்பின் கால் பாம்பு அறியும். பலே" என்ற ஒரு வசனம் வரும். ஒரு மனிதனை வெற்றி கொள்ள, அம்மனிதனின் வழியிலே சென்றால் மட்டுமே முடியும். அது நல்லதோ அல்லது கெட்டதோ. ஆனால் அது தான் நிதர்சனம். ஒரு திரைப்படத்தை எடுத்து வைப்பதற்கு முன், அதனுடைய திரைக்கதை, ஒளிபதிவு, இசை, கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் நடிகர்களின் நடிப்பு என்று சில அம்சங்கள் வெற்றி நிர்ணயத்து விடும். கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் அந்த பாத்திரத்தை எடுத்த நடிகரின் நடிப்பை பொறுத்து மிக பெரிய வெற்றி பெறும். குறிப்பாக இந்த இரண்டுமே மனநோயாளி சார்புடைய பாத்திரம் என்றால் இன்னும் முக்கியத்துவம் பெறும். சரி, நம்ம கதைக்கு வருவோம்.


வரிசையாக பெண்கள் கொடூர முறையில் கொல்லபடுவதாக தெரிந்ததால், வழக்கு எப்.பி.ஐக்கு வருகிறது. இந்த கொலை வழக்கு, ட்ரைனிங் எடுத்து கொண்டு இருக்கும் "ஜோடி போஸ்டருக்கு" கொடுக்க படுகிறது. கொலை செய்யப்படும் முறைகள் பார்த்ததில், ஒரு மனநோயாளி தான் இந்த கொலையை செய்கிறான் என்ற முடிவில் தேடுதல் வேட்டை ஆரம்பம் ஆகிறது. அதே போல், கொலை செய்யும் மனநோயாளி அடுத்த முயற்சி என்னவாக இருக்கும் என்பதை அறியவும், அந்த மனநோயாளி யாராக இருக்கும் என்பதை அறியவும்மனித உறுப்பை தின்பதற்காக, பல கொலைகளை செய்து  எட்டு வருடமாக சிறைசாலையில் இருக்கும் "பிரியன் காக்ஸ்" என்ற இன்னொரு மனநோயாளி இடம் அவள் செல்கிறாள். பிரியன் காக்ஸ் என்பவர் யார், தற்போது கொலை செய்து கொண்டு இருக்கும் மனநோயாளியை கண்டுபிடிக்க உதவி செய்தானா, கொலை செய்யும் நோக்கம் என்ன, யார் கொலையாளியை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே பல திருப்பங்கள் உடன் இப்படத்தை காணலாம்.


நமக்கு மனநோயாளிகள் என்றாலே நினைவுக்கு வருவது, தமிழில் ஆராரோ ஆரிரரோ மற்றும் மனசுக்குள் மத்தாப்பு தான். ஆனால் உண்மையான நிலைமை நமக்கு தெரியாது. ஆங்கில திரைப்படங்களில் தான் கொலை மட்டுமே செய்யும் மனநோயாளிகள் காட்டபடுவர்கள். இந்த திரைப்படத்தில் வரும் மனநோயாளிகள் மற்ற திரைப்படத்தில் வரும் மனநோயாளிகளை விட மாறுபட்டவர்கள் என்பதை முதலில் காட்டப்படும் சிறைசாலையே உதாரணம். படத்தில் மிக முக்கியமாக கருதபடுவது திரைக்கதை கொடுத்த விதம் தான். அதற்காக நாம் இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும். படம் ஆரம்பித்து நேரம் ஆக ஆக, நாமும் இந்த திரைப்படத்தில் ஒரு நபராகவே மாறி இருப்பது உண்மை. அது தான் இப்படத்தின் வெற்றி. அதே போல் அதிகாரியாக வரும் ஜோடி போஸ்டர் மற்றும் பிரியன் காக்ஸ்ன் நடிப்பு அபாரம். இசை இல்லாமலே வெறும் நடிப்பால் சில இடங்கள் நம்மை மிரள வைக்கின்றன.


கமல் மற்றும் செல்வராகவன் எடுக்க நினைத்த திரைப்படம் இந்த படத்தின் சாயல் தான் என்று கேட்டதாக நினைவு. அதனால் தான் பலமுறை தேடி கண்டுபிடித்து பார்த்தேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று.குறிப்பாக சைக்கோ கதாபாத்திரம் உடைய திரைப்படங்களை காணும் நண்பர்கள், தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம்.

2 comments:

Kumaran said...

இத்தன நாளா உங்கள எப்படி மிஸ் செய்தேன் என்று தெரியாது வருந்துகிறேன்.
இரண்டு முறை பார்த்த படமிது.
சிறந்த படத்துக்கு சிறப்பான முறையில் விமர்சனம் எழுதி உள்ளீர்கள்.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

நன்றி தோழரே... உங்களை என் வலை தளத்திற்கு வரவேற்கிறேன்