அமெரிக்காவில் எச்சரிக்கை உணர்வு என்பது அதிகம். அது எந்த விஷயம் ஆனாலும் சரி. இவ்வளவு எச்சரிக்கை அளவை யார் ஏற்படுத்தினார்கள் என்பதே ஒரு கேள்விகுறி.
இந்திய நண்பர் ஒருவருக்கு உடல்நலம் சரி இல்லாமல் போக, அவர் கொண்டு வந்த மருந்துகள் பயன்படுத்தியும் குணம் ஆகாமல் இங்கு உள்ள மருந்தை வாங்கி வர தன் நண்பர்களிடம் சொல்ல, அவர்கள் மருத்துவம் என்றால் இங்கே என்ன என்ற முறையை விளக்கினர். மருந்து கடைக்கு சென்றால், மருத்துவரின் சீட்டு இல்லாமல், மருந்தை தர மாட்டார்கள். அதனால் மருத்துவரை காண்பது தவிர வேற வழி இல்லை. இங்கே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்க்க முதலில் சொல்லி ஆக வேண்டும். அவரின் அனுமதி இன்றி உடனே சென்று நாம் நோய் காரணமாக பார்க்க முடியாது. அவரின் அனுமதி கிடைக்க இரண்டு நாள் முதல் இரண்டு வாரம் வரை ஆகும். அதற்குள் நோய்வாய் பட்டவர் என்ன ஆவார் என்பது ஒரு கேள்வி. நோய் அதிகம் ஆகி விட்டால், மருத்துவரை உடனே சென்று காண மூன்று மடங்கு வரை செலவு செய்ய வேண்டும். இதுவே இப்படி இருக்க, மருத்துவர் நம் நோய் பற்றி அங்கு அங்குலமாய் அலசி, இது தான் நோய் என்று நம்மிடம் சொல்லி மற்ற எல்லா விஷயத்துக்கும் நம்மிடம் உத்தரவு கேட்பார். ஆம் அவர் நமக்கு சொல்லாமல் கொடுத்த மருந்து, நம்மை எதாவது செய்து விட்டால் உடனே இங்கே நீதிதுறைக்கு சென்று அவர் மேல் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ள வாய்ப்பு அதிகம் என்பதால் எதையும் நம்மிடம் சொல்லாமல் செய்ய மாட்டார்கள். ஆனால் நம்மக்கோ இங்கு நோயால் உயிர் சென்று கொண்டு இருக்கும். ஒரு வழியாக மருத்துவரை பார்த்து, அவர் இது தான் நோய் என்று கண்டு பிடித்து, மருந்தை உடனே கையில் தர மாட்டார். மருந்து சீட்டை மருந்து கடைக்கே அவரே அனுப்பி விடுவார். நமக்கு வேண்டும் என்றால், கேட்டு ஒரு நகல் அவரிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும். சரி மருந்தை சாப்பிட்டு சரி படுத்தி கொள்ளலாம் என்று, மருந்து கடைக்கு சென்று மருந்து கேட்டால் உடனே கிடைக்காது. மருந்து சீட்டு இப்போது தான் வந்து உள்ளது. மருந்து நமக்கு கிடைக்க ஒரு மணி நேரம் முதல் ஒரு வாரம் வரை ஆகும். மருந்தை கடையில் நமக்காக எடுத்து வைத்து விட்டால், நமக்கு மருந்து கடையில் இருந்தே ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதற்கு பிறகு தான் நாம் அங்கு சென்று மருந்தை வாங்கி கொள்ள வேண்டும். இதனுள் இன்னொரு விஷயம் இருக்கிறது. மருந்து தீர்ந்து விட்டால், உடனே சென்று திரும்ப வாங்க முடியாது. ஏனெனில் அந்த மருந்து சீட்டில், எத்தனை முறை நாம் மருந்தை வாங்கி கொள்ளலாம் என்று எழுதி இருக்கும். மருந்து தீர்ந்து போய் விட்டால், மீண்டும் மருத்துவரை சென்று காண வேண்டும் என்பது தலை எழுத்து. இதை எல்லாம் கேட்ட நம்முடைய ஆள், மீண்டும் இந்திய மருந்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்.
நானும் நேரடியாக மருத்துவ துறை அனுபவ பட்டேன் என்பது இன்னொரு விஷயம். நானும் மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்க ஆறு மணி நேரம் காத்து இருந்தேன்.
அலுவகத்தில் புதிதாக வந்த நபர் வெளியே செல்வதற்கு அழுத்தும் பட்டன்னுக்கு பதிலாக, தீ எச்சரிக்கை பட்டனை அழுத்த அவ்வளவு தான் தீயின் முன் எச்சரிக்கை சத்தம் வர ஆரம்பித்தது. அலுவகத்தில் இருந்த அனைவரும் பதறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வர, நடந்த நிலைமை விளக்கியும் சத்தம் அதிகம் காரணமாக யாரும் உள்ளே அமர முடியாத சூழ்நிலை. நான்கு நிமிடத்தில் இரண்டு தீ அணைப்பு வாகனங்கள் வர, அதில் இருந்த வீரர்கள் அனைவரும் பெரிய தண்ணீர் குழாயுடன் ஓடி வந்தனர். அவர்களுடன் நிலைமையை எடுத்து கூறி சத்தத்தை நிறுத்துவதற்குள் மூன்றாவது தீ அணைப்பு வண்டி ஒரு புறம், மருத்துவ முதல் உதவி வண்டி ஒரு புறம், காவல் துறை அதிகாரிகளின் வண்டி என்று ஒரு புறம் என்று அலுவகத்தை முழுவதும் சுற்றி வளைத்து விட்டனர். சாதாரண பொய் எச்சரிக்கை மணிக்கே இந்த மதிப்பு.
சில சமயங்களில் இந்த மாதிரியான விஷயங்களை பார்க்கும் போது நமக்கு "இது ஓவரா தெரியல" என்று நினைத்தாலும், பல நல்ல விஷயங்கள் இதில் அடங்கி உள்ளது என்பது தான் உண்மை. மருத்தவ முறை கொடுமையானதாக இருந்தாலும், மருந்து கடையில் சென்று நாமே வாங்கி சாப்பிடுகின்ற மருந்து பல சமயங்களில் நமக்கு எமனாக இருப்பதை தடுக்கிறது. அதே போல் இங்கு போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்து என்ற வார்த்தைகளே கிடையாது.
தீ அணைப்பு துறை நம்மூரில் வேகமாக இருந்தாலும், நான் இங்கு கண்ட அளவு இல்லை. தீ அணைப்பு துறைக்கு இங்கு இருந்து யாரும் அழைக்க வில்லை. அவர்களே தெரிந்து கொண்டு வந்து விட்டனர். அதோடு மற்ற அனைத்து துறைகளில் இருந்து தானாகவே வந்து விட்டனர். பாரட்ட பட வேண்டிய விஷயம் தான். இதே நிலைமை நம்மூரில் வந்தால் மகிழ்ச்சி தான்
அனுபவங்கள் தொடரும்.
No comments:
Post a Comment