மீண்டும் ஒரு யாதர்த்த திரைப்படம். என்ன தான் கோடி கோடியாக பணத்தை செலவிட்டு திரைப்படத்தை தாயரித்தலும் அப்படம் ஒரு சிறு செலவில் வெளியான யாதர்த்தமான திரைப்படம் முன் தோற்று போகும். சரி யாதர்த்தம் என்னவென்று கேட்டால், மக்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தை மற்றும் உறவுகளை திரையில் கண்டால் மட்டுமே அப்படம் யாதர்த்தம் ஆகும். எல்லா யாதர்த்த படமும் வெற்றி படமா என்று கேள்வி எழ இங்கு வாய்ப்பு உள்ளது. யாதர்த்தம் என்பது திரையில் காட்ட கூடிய அளவில் இருந்தால் மட்டுமே அது எடுத்து கொள்ளப்படும். இல்லையெனில் அந்த யாதர்த்தம் வீணாகி விடும். வெயில், காதல் போன்ற படங்கள் யாதர்த்தங்களின் அளவீடு.
சரி கதைக்கு வருவோம். ஊரில் திருவிழா என்று இருக்கும் வேளையில், கடவுளின் வாகனமான மர குதிரை காணாமல் போக, மற்றொரு உயிருள்ள குதிரை ஊர் மக்களுக்கு கிடைக்கிறது. இதே நேரத்தில் ஊரில் பல நல்ல காரியங்கள் நடைபெற, காரணம் புதிதாக குதிரை என்று மக்கள் நினைக்க, திருவிழா களைகட்டுகிறது. மற்றொரு பாதையில், உயிருள்ள குதிரையை வளர்க்கும் கதையின் நாயகன் தேடி வர, அதற்கு மக்களின் எண்ணம் குறுக்கே நிற்கிறது. கதை நாயகனின் பெண் பார்க்கும் படலம் மற்றும் மெல்லிய காதல் என்று ஒரு புறம் இருக்க, அதே வேளையில் உள்ளூர் காதல் என்று மற்றொரு புறம். முடிவில் காதல் ஜோடிகள் சேர்ந்தனர, திருவிழா என்னவாயிற்று என்பதே
சாமி வாகனமான குதிரையை வைத்து ஒரு கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பவர்களுக்கு, முடியும் என்று கூறி தேனி மாவட்டத்தின் ஒரு சிறு கிராமத்தின் வாழ்க்கை முறையும் காட்டி, படம் பார்ப்பவர்களை அசர வைக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். மக்களின் மூட நம்பிக்கை என்ன, கிராமத்திலேயே தொழிலை செய்யும் மக்கள், பூசாரியாக இருக்கும் நபர்கள், கிராமத்தில் நடக்கும் மெல்லிய காதல், நண்பர்களின் நக்கல் பேச்சு, மைனரின் கலாட்டாக்கள், ஊர் பெரியவரின் நடவடிக்கை, மற்றும் காவல்துறை அதிகாரிகள் என்று ஒரு உண்மையான வாழ்க்கை முறையை காண முடிகிறது. அனைத்தையும் சிறப்பாக செய்த இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
அதே போல் திரைப்படத்திற்கு தேவை ஒரு நல்ல கதை என்பதை மீண்டும் இந்த படத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆம் கதையின் நாயகன் அப்புசாமியை பார்த்தாலே புரிந்து விடும். இக்கதைக்கு இளையதளபதியோ, ஜீவாவோ, சூர்யாவோ என்று இல்லாமல், நம்மை ஒரு சாதாரண மனிதன். அப்புசாமி கதையில் நடிக்காமல், மனிதன் வாழ்ந்தே இருக்கிறார். இந்த மனிதரையும் பார்த்து நாம் பொறமை பட்டோம் என்றால், அது சரண்யா மோகனுக்காக தான். குறிப்பிட்டு சொல்லும்படிக்கு இன்னும் இருப்பார்கள், இரண்டு பேர். ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் மற்றும் இசை அமைப்பாளர் இளையராஜா. தேனி மாவட்டத்தின் அழகை, நம் கண் முன்னால் கொண்டு வந்து, மனதை வானவில் போல் மாற்றி விடுவர். எப்போதும் போல் இளையராஜா அவர்கள், நம் மனதை படத்தினுள் கொண்டு சென்று, அப்புசாமியின் வாழ்க்கையை மற்றும் உள்ளூரின் மக்களின் உணர்வை உணர செய்வார். இருவருக்கும் என் பாராட்டுகள்.
தவிர்க்காமல் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படம்.
No comments:
Post a Comment