Saturday, December 11, 2010

உணர்வுமயமான பயணம் - நந்தலாலா




நந்தலாலா திரைப்படத்தைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் படித்துவிட்டதால், இப்படத்தை பார்க்க வேண்டுமா என்ற எண்ணத்துடன் இருந்தேன். தீடிர் என்று பொழுது போகாமல் பார்க்க ஆரம்பித்தேன். சுமார் ஒரு மணி நேரத்தில் "என்னடா இந்த படத்தை போயி இப்படி புகழ என்ன இருக்கு" என்ற எண்ணம். ஆனால் படத்தின் இரண்டாம் பகுதியில் படத்தின் உள்ளே செல்ல ஆரம்பித்தேன். திரைப்படம் முடிந்த பிறகும், மனதில் வசனங்கள் மற்றும் பயணத்தின் போது சந்தித்த மனிதர்களின் நினைவுகள். கமல் ஒரு படத்தில், பழமொழியை அனுபவிக்க வேண்டும் ஆராய கூடாது என்று கூறுவார். ஆம் அதே போல் இப்படமும். படத்தை பார்த்தால் மட்டுமே அதனோடு பயணிக்க முடியும்.

ஒரு சிறுவனும், ஒரு ஆளும் அவர்களின் தாயை தேடி போகிற கதை. அவர்கள் எப்படி சேர்ந்தார்கள் மற்றும் தாயை பார்த்தார்களா என்பதே மீதி கதை. நான் பதிவுலகில் படித்த விமர்சங்கள் பல திரைப்படத்தின் கதையை நோக்கி பயணம் செய்து இருந்தனர். ஆனால் நான் இப்படத்தில் ஈர்க்க பட்டது "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற பார்வையில். ஆம் பயணம் எனக்கு பிடித்த விஷயம். படத்தில் இருவரும் சேலம் அருகில் உள்ள இடங்களுக்கு சென்னையில் இருந்து பயணிக்கின்றனர். நாமே ஊருக்கு போகையில் நம்முடன் பயணிக்கும் நபர்களின் வேறுப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் கலாச்சாரம் என்று பார்க்கிறோம். அதை பார்க்கும் போது தான், நாம் ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு வரும் அதே போல் நாம் பரவாஇல்லை என்ற உணர்வும் வரும். மனிதர்களின் மற்றும் மக்களின் குணாதியசங்கள் பயணத்தின் போது தான் அறிந்துக் கொள்ள முடியும்.


இதே போல் தான் படத்திலும் வேறுப்பட்ட மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது.  அவர்கள் எப்படி பட்டவர்கள் மற்றும் நம் நாயகர்களுக்கு உதவி செய்தனரா என்பதே எனது பார்வை. வழியில் சந்திக்கும் நபர்கள் திருடன், ஆட்டோக்காரன், போலீஸ்பள்ளி மாணவி, மாட்டு வண்டிக்காரர், நொண்டி மனிதன், புது மண ஜோடி, குடித்து விட்டி சுற்றும் வாலிபர்கள், இளநீர் விற்பவர், லாரி ஓட்டுனர், தொட்டியில் குளிக்கும் கிழவர், ஐஸ் விற்கும் மனிதர், இராணுவ நபர்கள், விபச்சாரி (ஸ்நிக்த), அவளை கடத்தும் மனிதர்கள்


இதில் யாருக்கும் யாரும் குறை இல்ல பாத்திரங்கள். ஆனால் என் மனதில் நிற்கும் சில பாத்திரங்கள் போலீஸ், நொண்டி மனிதர், இளநீர் விற்பவர், மற்றும் ஸ்நிக்த. போலீஸ் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொன்னுடன் முழித்து முழித்து பார்ப்பதும், நொண்டி மனிதனின் கை தடி வெட்டப்பட்ட உடன் 'என் கால் போச்சே' என்று அழுவதும், இளநீர் விற்பவர் விழுத்தவுடன் மூவரும் அதை குடிப்பதும், ஸ்நிக்தவின் வசனங்களும் மனதில் நிற்பவை.

"உடம்பெல்லாம் ஒரே நாத்தம். எங்க அம்மா பொணம் கூட இப்படி நாறல. முதல்ல உடம்பு தான் நாருச்சு இப்ப மனசு கூட நாறுது." 

"போடா மெண்டல். இப்ப உனக்கு எப்படி இருக்கு. அதே போல தானே எனக்கும் இருக்கும்"

அதே போல் மிஷ்கினின் காட்சிகள் இதிலும் உண்டு. வெறும் கால்களை காட்டியே உணர்வை ஏற்படுத்துவது. முக்கியமாக அம்மாவை தூக்கிக் கொண்டு செல்கையில் கால்களுடன் சங்கிலியும் செல்வதையும் காட்டும் போது, அந்த காட்சி நூறு வசனங்களுக்கு சமம் என்பதை உணர முடியும். இதே போல் பல இப்படத்தில் பல காட்சிகள்.



வெறும் காட்சிகளை கொண்டு ரசிகர்களை ஈர்க்க முடியாது. அதற்கு இசை என்ற ஒரு முக்கியமான விஷயம் தேவைபடுகிறது. வசனம் இல்லா இடத்திலும், அக்காட்சிக்குரிய உணர்வை இசையால் கொடுக்க முடியும் என்பதை இசைஞானி காட்டி இருப்பார். இளையராஜா ஒரு இசைஞானி என்பதை இப்படத்தை பார்த்தே புரியும். அவரை தவிர இப்படத்திற்கு வேறு நபர் இசை அமைக்க முடியுமா என்பது கேள்விகுறி தான்.

நந்தலாலா - உணர்வுமயமான பயணத்தின் தொடக்கம்

முதலில் நான் சொல்லியதை போல, படத்தை பார்த்து அனுபவத்தை பெற வேண்டும். அமெரிக்காவில் குப்ப படத்தை எல்லாம் ரிலீஸ் பண்ணுவாங்க. ஆனா இந்த உணர்வு சம்பந்தப்பட்ட திரைப்படத்தை போடா மாட்டங்க. என்ன கொடும சார் இது

No comments: