Monday, February 09, 2009

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

மதுரையில் உள்ள முக்கியக் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. மதுரை மத்தியில் இக்கோவில் இருந்தாலும் ஒரே ஒருமுறை தான் சென்று உள்ளேன். இதோ அதன் சிறப்பு:

தல வரலாறு
மதுரையை ஆளும் மீனாட்சி ஆறுமாதமே பொறுப்பு வகிப்பாள். மாசி முதல் ஆவணி வரை அம்பிகை ஆள்வாள். திருமலை நாயக்கர் காலத்தில் மாசித்திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, சித்திரை முதல் ஆவணி வரை அம்பிகை பொறுப்பேற்று ஆட்சி செய்யும் வகையில் விழா மாற்றப்பட்டது. ஆவணி மூலத்தன்று மதுரையின் மன்னராக சுந்தரேஸ்வரர் பொறுப்பேற்பார். எச்செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே, பட்டாபிஷேகத்திற்கு முன்பு சுந்தரேஸ்வரரே ஒரு லிங்கத்திற்கு பூஜை செய்வார். இவ்வாறு லிங்க பூஜை செய்த அமைப்பில் இங்கு சிவன் காட்சி தருகிறார். அதாவது சிலை வடிவில் மீனாட்சியுடன் இருக்கிறார். இவர்களுக்கு முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. இப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம். ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இவர், "இம்மையிலும் நன்மை தருவார்' என்று அழைக்கப்படுகிறார்.

அதிசய சிவலிங்கம்
எந்தக் கோயிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவர். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.

வெள்ளை லிங்கம்
கோயில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார்.

கல் ஸ்ரீசக்ரம்
அம்பாள் மத்தியபுரி நாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர்.
திருமணமாகாதவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, "மாங்கல்ய வரபிரசாதினி' என்றும் பெயருண்டு.தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது. பொதுவாக செம்பில் ஸ்ரீசக்ரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்ரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

ராஜ உபசார அர்ச்சனை
சிவபெருமானே அரசராக முடிசூட்டிக் கொண்ட தலம் மதுரை. அதற்கு முன் இங்கு லிங்க பூஜை செய்தார். இதனடிப்படையில், தலைமைப்பொறுப்புள்ள பதவி கிடைக்கவும், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் சிவனுக்கு, "ராஜ உபசார அர்ச்சனை' செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

வருடத்திற்கு 54 அபிஷேகம்!
இக்கோயிலில் பூஜையின்போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.

தோசை நைவேத்யம்
திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை கள்ளழகர் கோயில், தோசை நைவேத்தியத்திற்கு பெயர் பெற்றது. இதேபோல் இங்கும் சிவனுக்கு தோசை படைக்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு விளாபூஜையின்போது தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர். மதுரையிலுள்ள பஞ்சகூடத்தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவக்குகிறார்கள்.

"சித்தர்' சிவன்
மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார். கல்வி, கலைகளில் வளர்ச்சி பெறவும், மன அமைதிக்காகவும் இவருக்கு பவுர்ணமி மற்றும் திங்கள்கிழமைகளில் சாம்பிராணி பதங்க (தைலத்திற்கு முந்தைய நிலை) காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்து வேண்டிக்கொள்கின்றனர். தை, சித்ராபவுர்ணமி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்
பொதுவாக சிவன் கோயில்களில் அவரது கணக்காளரான சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத்தலத்திலுள்ள சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்கிறார்கள். தீராத பிரச்னைகளிலிருந்து விடுபட சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை இவருக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், சண்டிகேஸ்வரர் தங்களது பிரச்னை தீர சிவனிடம் பரிந்துரை செய்வார் என்று நம்புகிறார்கள். எனவே இவரை பக்தர்கள், "பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்' என்று அழைக்கிறார்கள்.

காரமான புளியோதரை
இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பகசஷ்டி, மார்கழி அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். இவரது சன்னதிக்குள் வீரபத்திரர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். பைரவருக்கு ஒரு பங்கு அரிசியுடன், 3 பங்கு மிளகாய் வத்தல் சேர்த்து (ஒரு கிலோ அரிசிக்கு, 3 கிலோ மிளகாய் என்ற விகிதத்தில்) மிகவும் காரமான புளியோதரை செய்து படைக்கிறார்கள்.

முருகனுக்கு பூக்குழி திருவிழா
அம்மன் கோயில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவன் கோயிலில், அதுவும் முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.

ஜுரகர சக்தி
கோயில்களில் மூன்று கால்களுடன் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவரை பார்த்திருப்பீர்கள். ஆனால், ஜுரசக்தியை பார்த்திருக்க முடியாது. இவள் இக்கோயில் பிரகாரத்தில் இருக்கிறாள். அருகில் ஜுரகர லிங்கம் இருக்கிறது. உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் திங்களன்று ஜுரகர லிங்கம், ஜுரகர சக்திக்கு மிளகு ரசம், சாத நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

லிங்கோத்பவருக்கு "பாவாடை'
மத்தியபுரிநாயகி சன்னதிக்கு பின்புறம் அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ள பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, பாவாடை, தாலி கட்டி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

உதிரிப்பூக்கள்...
* "பூலோக கைலாயம்' என்றழைக்கப்படும் இத்தலம், மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.
* இங்கு அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
* சிவன், அம்பிகைக்கு ஊர் பெயர் அடிப்படையில் "மதுரநாயகர்', "மதுரநாயகி' என்றும் பெயருண்டு.
* பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.
* கோயில் வளாகத்தில் விபூதி விநாயகர் இருக்கிறார்.

No comments: