Monday, February 09, 2009

நான் கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி)

மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் நான் ஞாயிறுக்கிழமை அன்று அதிகாலை மணி அளவில் நண்பர்களுடன் ஐநாக்ஸ் திரைஅரங்கில் அமர்ந்தோம். திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும் போது எதோ ஒரு வித ஏமாற்றம். இது கமர்சியல் படமல்ல என்பது பாடல் கேட்கும் போதே தெரிந்து விட்டது, எனவே எதிர்பார்ப்புகளும் அதை ஒட்டியே வைத்து இருந்தேன், அதையும் மீறி சில காரணத்தால் மனதில் நிற்க மறுக்கிறது.

விளிம்பு நிலை மனிதர்களை பற்றிய கதை இது. நாம் இருக்கும் தொழில்நுட்ப உலகில் இருந்து சற்றும் நாம் எதிர்ப்பார்க்காத இரண்டு உலகத்திற்கு நம்மை கூட்டி செல்லும் இத்திரைப்படம். காசியில் பிணத்திற்கு நடுவில் வாழ்ந்து தன்னை தானே கடவுள் சொல்லும் மக்களும், உடல், மன நலம் குன்றியவர்களை அல்லது நன்றாக இருப்பவர்களை ஊனமாக்கி அவர்களை வைத்து பிச்சை எடுக்க வைத்து மிரட்டி பிழைப்பு நடத்தும் பிறவிகளும் ஒருசேர கதையில் கொண்டு வந்து மிரட்டி இருப்பது பாலாவின் தனித்திறமை.

பலரும் காசியில் எடுக்கப்பட்ட காட்சிகளின் நேரம் மிகக்குறைவு என்று குறைப்பட்டு இருந்தனர். உண்மையில் காசியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அரை மணி நேரம் வெட்டப்பட்டுள்ளதாக ஊடக நண்பர் ஒருவர் கூறினார்.

இதில் அவலட்சணமான முகம் கொண்டவர்களை காட்டி இருப்பார், மிகையாக இல்லை உண்மையில் இதை போல இருப்பவர்கள் தான். ஆனால் என் மனதிற்கு படுவது இவர்களை காட்சிகளில் அதிகம் காட்டி விட்டார், இவர்கள் கஷ்டப்படுவது உண்மை என்றாலும் அந்த பகுதியை இன்னும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம், அவர்களை அடிக்கடி அருகில் காட்டுவதையும் தவிர்த்து இருக்கலாம். ஒரு சிலருக்கு பரிதாபத்திற்கு பதில் சலிப்பு வர வாய்ப்புண்டு.

ஆர்யா இதில் வீணடிக்கப்பட்டு விட்டார் அல்லது அவர் நடித்து இருந்த காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கலாம். கோபமாக நடப்பதையும் பேசுவதையும் நடிப்பாக கருத முடியாது. இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு பூஜாவிற்கு, அவரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார் அதுவும் கடைசி காட்சியில் நம் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுக்கிறார். கண் தெரியாதவர் போல வருவதால் காண்டாக்ட் லென்ஸ் பொருத்தி இருக்கிறார், சிரமமான நடிப்பு தான்.

படம் முழுவதும் சீரியஸ் ஆக இருக்கும் என்று நினைத்து விடவேண்டாம், படத்தில் நடு நடுவே கதையோடு ஒட்டிய நகைச்சுவை வசனங்களும் உண்டு, சிரிக்காமல் இருக்கவே முடியாது, இயல்பான வசனங்கள். அதுவும் உடல் ஊனமுற்ற நபரில் ஒரு சிறுவன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை, அதே போல பலர். ஒரு காட்சியில் ஆர்யாவை அங்கே உள்ள போலி சாமியார்கள், சாமி! வாயில இருந்து லிங்கம் வருமா? என்று கேட்டதும் ..ம்ம் உன் வாயில அடிச்சா ரத்தம் வேணா வரும் என்று கூற அவர் கப் என்று இருப்பது செம காமெடி:-)) இதில் பல டைமிங் காமெடி என்பதால் அதை பார்த்தால் மட்டுமே உணர முடியும், வெறுமனே கூறுவதால் அந்த காட்சியின் அமைப்பு புரியாது.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் குத்து பாட்டு, வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகள், ஒன்றுக்கும் உதவாத கதை, ஹீரோயிசம் என்று சம்பாதிக்க படம் எடுக்கும் மற்றவர்களிடையே இருந்து விலகி, கவனிக்கப்படாத மக்களை பற்றி அவர்கள் படும் துன்பங்கள்,அவர்களின் ஏக்கங்கள் பற்றி படம் எடுக்க பாலா ஒருவரால் தான் முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். அதற்காக அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். விமசர்னம் என்ற பெயரில் அவரை குறை கூறாமல் இருக்க வேண்டும்.

No comments: