Friday, April 15, 2011

குள்ளநரி கூட்டம் - திரைவிமர்சனம் - 2011



மதுரையை மையமாக வைத்து எடுக்கும் படங்கள் எப்போதும் தாயரிப்பாளர் கையை கடித்தது இல்லை என்பது நிதர்சனம். அதை மெய்பிக்கும் வகையில் வந்து உள்ள படம் தான் இது. கத்தி, அருவாள் என்று இல்லாமல், மதுரையில் சாதாரண இளைஞன் எப்படி இருப்பான் என்றும், வாழ்க்கை முறை என்ன என்றும் தெளிவாக கண் முன் வைத்து உள்ள படம் இது. நானும் படத்தின் பெயரை பார்த்த உடன், மீண்டும் பெரிய ரவுடியுடன் மோதும் கதை என்று நினைத்தேன். ஆனால் படம் பார்க்கும் போது அந்த  நினைப்பை அழித்து, ஒரு மெல்லிய காதல் கதை கொடுத்ததுடன், நமக்கும் இந்த மாதிரியான காதல் கிடைக்காத என்ற எண்ணத்தை உண்டாக்கும் படம் என்றால் மிகையல்ல.


மதுரையை சேர்ந்த விஷ்ணு (கதைப்படி வெற்றி), படிப்பை முடித்து விட்டு, அப்பா தினமும் கொடுக்கும் பத்து ரூபாய் வைத்து கொண்டு வேலை தேடும் சாதாரண இளைஞன். அவனது அப்பாவிற்கு காவல்துறை என்றாலே பிடிக்காது. கல்யாணமாகி வீட்டில் சேர்ந்து இருக்கும் அவனது அண்ணன் மற்றும் அவனது அம்மா என்று ஒரு அழகான குடும்பம். ரம்யா மதுரையில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவி. விஷ்ணுவின் அப்பாவிற்கு சேர வேண்டிய mobile recharge தொகை, கதாநாயகிக்கு  சென்று விட, அந்த தொகையை மீண்டும் கேட்க போகும் போது விஷ்ணுவுக்கும், ரம்யாவிற்கும் காதல் ஏற்படுகிறது. காதல் சேர வேண்டும் எனில், விஷ்ணு போலீஸ் ஆக வேண்டும் என்று  ரம்யாவின் அப்பா நிபந்தனை விதிக்க, முடிவு என்ன என்பதே மீதி கதை.


படத்தில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. காதல் ஏற்படுகின்ற தருணத்தை, அழகாக கொடுத்த விதம் தான், நம் மனதை கவர்கிறது. இயக்குனருக்கு என் பாராட்டுகள். பாடல்கள் மிக பெரிய வெற்றி இல்லாமல் போனால் கூட, கேட்டும் ரகம் தான். காதல் செய்யும் இடங்கள் கூட வறட்சி தெரியாமல், பல வண்ணங்கள் தெரிகிறது. குறிப்பாக மதுரையின் திருமலை நாயக்கர் மகாலின் அழகு திரையில் காண முடிகிறது. அதற்கு ஒளிபதிவளருக்கும் பாராட்டுகள்.  அதை போலவே, படத்தில் நகைச்சுவை தனியாக இல்லாமல், வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களே நகைச்சுவை தான் என்று கண் முன்னால் வைக்கிறார். விஷ்ணுவின் அண்ணனாக வரும் நபரின் வசனங்கள் கைதட்டும் விதம். அண்ணி, அம்மா என்று குடும்பமே காதலை ஏற்று கொண்டு, காதலியுடன் மணிகணக்கில் அவர்கள் பேசுவது அழகு. காவல்துறை வேலையில் சேர விரும்பும் மக்கள், இந்த படத்தை பார்த்து  எவ்வளவு பிரச்சனைகளை எதிர்க் கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.  காவல்துறையில் நடக்கும் இத்தனை குளறுபடிகளை இயக்குனர் தைரியமாக இதில் கொடுத்ததிற்கு நச் என்று ஒரு கும்பிடு. மொத்தத்தில் குள்ளநரி கூட்டம், கண்டிப்பாக  பார்க்க வேண்டிய படம்.


Thursday, April 14, 2011

கலவைகள்


அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
*************************************************

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய அரசு கண்டிப்பாக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட கூடாது. ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை. தென் தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக கருதுவது விலைவாசி ஏற்றம் மற்றும் மின்வெட்டு. அதை தவிர மக்கள் எதுவும் பெரிதாக நினைக்கவில்லை. 2G, இலங்கை தமிழர் பிரச்சனை, மற்றும் ஊழல் என்று எதுவுமே அவர்களுக்கு தெரிவதில்லை. மே 13ம் தேதி தமிழ் மக்களின் தலை எழுத்து தெரிந்து விடும்.
*************************************************
இந்த வருடத்தையும் சேர்த்து ஐந்தாவது வருடமாக, சித்திரை திருவிழாவை காண முடியவில்லை. விழா ஆரம்பம் ஆகி ஆறு நாட்கள் முடிந்து விட்டது. மதுரையை விட்டு வெளியே வேலை செய்யும் மக்கள் அனைவருக்கும் இருக்கின்ற, ஒரே எண்ணம் தான் தற்போது இதுதான். சொர்கத்துக்கும் ஈடாகத மதுரை முழுவதும், மக்கள் வெள்ளம். புதூரில் அல்லது அண்ணாநகரிலோ அழகரை பார்த்து திரும்பும் போது கிடைக்கும் நிம்மதி, எங்கு போனாலும் கிடைக்காது என்பது நிஜம். அழகரை காண கீழே உள்ள பாடலை பாருங்கள். இசை அமைப்பாளர் தேவா அவர்கள் செய்த நல்ல காரியங்களில் மிக முக்கியமாக நான் கருதுவது, இந்த பாட்டிற்கு இசை அமைத்தது தான்.



**************************************************************************
சமீபகாலமாக என் மீது எனக்கு படுபயங்கர கோபம். எனது சொந்த வேலைகளுக்குகாக செலவிடும் நேரத்தில் புத்தகம் படிப்பதை மறந்தேன், ருசியான சமையல் செய்வதை மறந்தேன், படம் பார்ப்பதும் குறைந்து போனது, சீக்கிரம் தூங்கும் நேரத்தை மறந்தேன். இத்தனைக்கும் காரணம் facebook தளம். பல விஷயங்கள் அறிந்து கொண்டாலும், நேரத்தை கொள்கிறது என்பதே நிதர்சனம். அதில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் முழுவதும் பார்க்காமல், அடுத்த நாளில் இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுகிறேன். முடியலே

**************************************************************************
கீழே உள்ள படத்தை பாருங்கள். இது என் வீட்டிற்கு அருகில் இருக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை. இந்த சாலைகளுக்கும் இடையில் குறைந்தது ஆறு லாரிகள் நிறுத்தலாம். சென்ற சனிக்கிழமை, ஒரு புறத்தில் இரண்டு கார்கள் சென்று கொண்டு இருந்தன. முதல் காரில் ஒரு வயதான அமெரிக்கா வெள்ளை நபர். இரண்டாவது காரில் ஒரு அமெரிக்கா வெள்ளை பெண்மணி.  முதல் கார் செய்த தவறால், இரண்டாவது கார் முதல் காரில் பின்னால் இடிக்க, முதல் கார் நிலை இழந்து,  ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலை சென்று அங்கு வந்துக் கொண்டு இருந்த ஒரு காரை இடித்தது. எந்த வித தவறும் செய்யாமல் மூன்றவதாக விபத்தில் சிக்கிய காரில் இருந்த நபர், அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். முதல் மற்றும் இரண்டாம் காரில் உள்ள நபர்கள் பிழைத்துக் கொண்டார்கள். இதில் கொடுமையான விஷயம், மூன்றாவது காரில் உயிர் இழந்த நபர் ஒரு இந்தியன். அதுவும் 26 வயது ஒரு வாலிபன். என் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாரம். இப்போது தான் அடுத்த வேலை கிடைத்து, அந்த ஊருக்கு செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தாரம். என் அலுவலகத்தில் முழுநேர தொழிலாளியாக பணிபுரிந்தால் எதோ ஒரு சில சலுகைகள் கிடைக்கும். அந்த நபரோ H1-B consultant. மற்ற வேலைகள் இப்போது எப்படி என்று என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. அவருக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் இந்தியாவில் இருக்கும் அவருடைய பெற்றோருக்கு என்னுடைய அனுதாபங்கள்.