நாம் வாழ்க்கையில் காணும் ஒவ்வொரு அனுபவமும், மிக முக்கியமானது. மதுரையில் இருந்து சென்னைக்கு முதலில் வந்து இறங்கி போது, முதல் மூன்று மாதங்களில் கிடைக்கும் அனுபவங்கள் வித்தியாசமானது. சென்னையில் இருக்கும் அதிவேக வாழ்க்கை முறை, சாப்பாட்டு வழக்கம், மக்களின் பழக்கவழக்கம், நண்பர்களின் வீடு, கோவில்களின் விதிமுறைகள், வீடு பார்த்தல் என்ற பல புது அனுபங்கள்.
முக்கியமாக வீடு பார்த்து, அமருதல் என்பது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குதிரை கொம்பு குறிப்பாக படிப்பை முடித்து விட்டு தோழர்களுக்கு. ஆனால் இன்றைய நிலைமை வேறு என்றாலும், நல்ல வீடு பார்ப்பது என்றால் கஷ்டம் தான். நானும் சென்னையில், மேற்கு மாம்பலம், வில்லிவாக்கம், வடபழனி, சைதை, மேற்கு தாம்பரம், சாலிகிராமம், கிழக்கு தாம்பரம் என்று பல இடங்களில் வீடு பார்த்து தங்கி இருந்தாலும், ஒவ்வொரு வீடும் கிடைக்கும் முறையை பார்த்தால், உலகப்போரில் கூட பங்கு எடுத்துக் கொண்டு வந்து விடலாம் என்று தோன்றி விடும் நினைப்பு வரும். இது போக நண்பர்களுக்காக என்று பல ஏரியாக்கள் பார்த்தது உண்டு.
சென்னையில் காசு புடுங்கி சாப்பிடும் பண சைத்தான்கள் பாதிக்கு மேல் என்பதால், எங்கு சென்றாலும் பணத்தை வாரி இறைக்க வேண்டும். புரோக்கரில் ஆரம்பித்து, வீட்டு வாடகை அதிகமாக, மின் இணைப்புக்கு பத்து மடங்கு அதிகமாக என்று எங்கையோ போய் நிற்கும். நினைத்தாலே மயக்கம் வந்து விடும் சில பேருக்கு. தமிழகத்தில் பிற இடங்களில் நிலைமை என்னவென்று தெரியவில்லை. நான் பார்த்த சில வீடுகளில் வீட்டிற்கு சொந்தகாரர் , வருடத்திற்கு ஒரு முறை புது ஆட்களை கொண்டு வந்து குடி அமர்த்துவர். காரணம் வருடத்திற்கு ஒரு முறை வாடகை ஏற்றி கொள்ளலாம். குடி வரும் போதே இந்த விவரத்தை சொல்லி தான் அமர்த்துவது. குடி வருபவர்கள், வீடு கிடைப்பதே பெரும் பாடு என்பதால், தெரிந்தே வருகின்றனர். வீடு காலி செய்யும் போது கூட, சொந்தகாரர் கொடுத்த முன் பணத்தில் வீட்டை சரி செய்ய வேண்டும் என்று கூறி பாதி பணத்தை எடுத்து கொள்வர். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
சென்னையில் அனுபவங்கள் எனக்கு கிடைத்து இருந்தாலும், நான் அமெரிக்காவிற்கு வரும் போது நண்பர்கள் இருந்த காரணமாக ஒரு வீட்டில் போய் அமர்ந்து கொண்டேன். அதனால் வீட்டை பார்த்து அமரும் முறை என்ன வென்று தெரியாமல் போய் விட்டது. ஆனால் இங்கு தான் வேறு நிலைமை ஆயிற்றே. பத்து மாதம் முடிந்த நிலையில் மாற வேண்டிய சூழ்நிலை. அமெரிக்காவில் வாடகை வீட்டில் இருக்கும் நிலை, அதுவும் என் அனுபவத்தில்
சென்னையில் கூட வீடு வாடகைக்கு எடுக்கும் போது, அரசு முத்திரை பதித்த தாளில் வீட்டின் சொந்தகாரரும், வாடைக்கு குடி வருபவரும் பேசி கொண்டு கை-எழுத்து போட வேண்டும். பேசியவற்றை மீறி, எதாவது செய்தால் நீதி மன்றத்திற்கு செல்லலாம் என்பது காது வழி கேள்வி. ஆனால் இந்த வீட்டு வாடகை முறையில் பத்திரம் என்பது செல்ல காசு என்பதும், நீதி மன்றம் அதை எடுத்து கொள்ளது என்றும் காது வழி கேள்வி. எது உண்மை என்று தெரியவில்லை. நான் பார்த்த வரையில், வீட்டிற்கு சொந்தகாரர், பத்திரத்தில் கையாப்பம் போட்டு கொடுத்து பார்த்ததில்லை. அதே போல் அமெரிக்காவில், லீஸ் என்கின்ற விதிமுறை இருக்கிறது. ஒரு வாடகை வீட்டிக்கு செல்ல வேண்டும் என்றால், முதலில் லீஸ் போட வேண்டும். அதாவது எத்தனை மாதத்திற்கு நான் இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க போகிறேன் என்ற அடங்கிய விபரம். வீட்டை எப்படி எடுத்தேனோ அதே போல் தர வேண்டும். அப்படி எதாவது பழுது பட்டு இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்ற விபரமும் அதில் அடங்கி இருக்கும். செல்ல பிராணிகள் வளர்த்தால், அதற்கு பின்பற்றவேண்டிய வழிமுறைகள் என்று ஒரு முப்பது பக்கம் இருக்கின்ற விதிமுறைகள் தான் லீஸ். இந்த முப்பது பக்கமும் நாம் கை-எழுத்து போட வேண்டும். இதை மீறி எதாவது செய்தால், நாம் நீதி மன்றம் போய் நிற்க வேண்டும் என்கின்ற சூழ்நிலை.
மிக முக்கியமாக, லீஸ் முடிவதற்கு ஒரு மாதம் முன்பே இந்த வீட்டை காலி செய்ய போகிறோம் என்று சொல்ல வேண்டும் அல்லது இதே வீட்டில் தொடர்ந்து தங்க போகிறேன் என்றாவது சொல்ல வேண்டும். இல்லையென்றால் நாம் அதிகமாக பணம் கொடுக்க வேண்டி இருக்கும் அல்லது நீதி மன்றம் போய் நிற்க வேண்டி இருக்கும். ஒரு வீட்டில் இருந்து லீஸ் முடிந்து, அடுத்த லீஸ் அதே வீட்டிற்கு எடுத்தால், வாடகை அதிகம். அதனால் வேறு வீடு பார்த்து செல்வது முறை.
ஒரு வருடத்திற்கு லீஸ் போட்டு விட்டு, எழாவது மாதத்தில் நாம் காலி செய்ய வேண்டிய நிலை வந்தால் இரண்டு அல்லது மூன்று மாத வாடகை கொடுக்க வேண்டும். அதுவும் இந்த லீசில் இருக்கும். கொடுக்க தவறினால், கம்பி என்ன வேண்டியது தான். இதே லீஸ் விவகாரம், தொலைபேசி இணைப்பு, இணைய இணைப்பு என்று எல்லா இடங்களிலும் உண்டு .
இதே போல் இன்னொரு முக்கிய விஷயம், எப்படி பட்ட வீடு வேண்டும் என்பது. தனி வீட அல்லது மாடி முறை வீடா. இங்கே பல தனியார் நிறுவனங்கள் (ரிலையன்ஸ் மற்றும் டாட்டா போல), தனி தனி வீட்டையோ அல்லது பிளட் முறை வீட்டையோ கட்டி கொடுத்து, அவர்களே வாடகைக்கு கொடுப்பார்கள். பெரிய தனியார் நிறுவனம் என்றால், பல ஊர்களில் அதே பெயரில் வீடுகளை காணலாம். நூறு அல்லது இரண்டு நூருக்களில் வீட்டை கட்டி, அதற்கு ஒரு அலுவலகம் வைத்து இரண்டு அல்லது மூன்று பேர் வேலைக்கு இருப்பார்கள். அவர்கள் தான் நமக்கு வாடகைக்கு விடுவார்கள்.
சென்னையை போல் நான் இங்கு புரோக்கரை பார்த்தது இல்லை. இணையதளத்திலேயே இந்த மாதிரியான எதாவது ஒரு வீட்டை பார்த்து, அங்கு சென்று பேசி வீடு பிடித்து இருந்தால், நம்முடைய அனைத்து விபரமும் தந்து விட்டு வர வேண்டும் (தற்போது தங்கி இருக்கும் இடம், வேலை பார்க்கும் இடம்). முன் பணமாக அவர்கள் நிர்ணயத்து வைத்து இருக்கும் தொகையை கொடுக்க வேண்டும். புதிதாக குடி போகும் இடத்தில் வேலை செய்வோர், நாம் தங்கி இருக்கும் இடத்தில் விசாரித்து பார்ப்பார்கள். நல்ல விதமான சொற்கள் வந்தால் மட்டுமே, புது வீடு கிடைக்கும். வீடு வாடகை வருவோரின் வருமானம், வாடகையின் தொகையை போல் மூன்று மடங்கு இருந்தால் மட்டுமே வீடு.
இத்தனையும் மீறி, நமக்கு வீடு கிடைத்தால் வீட்டில் மின்சாரம் இருக்காது. மின் இணைப்பு எல்லா இருக்கும். நாம் புதிதாக இந்த வீட்டிற்கு வருவதால், இருக்கும் மின் இணைப்பை நம் பெயருக்கு மாற்றி கொள்ள வேண்டும். ஒரு வீட்டில் இருந்தது காலி செய்யும் போது, அந்த வீட்டில் நமது பெயரில் இருக்கும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.இல்லையென்றால் வீடு காலி செய்த பிறகும், நாம் அந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழ் நிலை வரும். மின் அலுவலகம் சென்று, மின் இணைப்பை பெற, அதற்கு ஒரு கட்டணத்தை கொடுக்க வேண்டும்.
சரி ஒரு வழியாக புது வீட்டிற்கு தேவையான அனைத்தையும் முடித்து விட்டு, நிம்மதியாக அமரலாம் என்றால் முடியாது. இன்னும் இரண்டு வேலைகள் மிச்சம் இருக்கும். ஒன்று நமது அனைத்து பொருட்களையும் புது வீட்டிற்கு கொண்டு வருவது. இந்தியாவில் பக்கேர்ஸ் மற்றும் மூவர்ஸ் என்ற வேலை உண்டு. தொழிலாளிகள் வந்து அனைத்து பொருட்களை பழைய வீட்டில் இருந்து, புது வீட்டிற்கு மாற்றி தருவர். ஆனால் இங்கு தொழிலாளிகள் வேலைக்கு மிக அதிக பணம் என்பதால், நாமே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். லாரியை வாடகைக்கு எடுத்து அல்லது எப்படியோ, புது வீட்டிக்கு செல்ல வேண்டும்.
இன்னொரு விஷயம், வீட்டை காலி செய்யும் போது, அந்த வீட்டிக்கு வரும் போது வீடு எப்படி இருந்ததோ அதே போல் அவர்களுக்கு திருப்பி தர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சரி செய்ய ஆகும் செலவை நாம் ஏற்று கொள்ள வேண்டும். அதனால் வீட்டை சுத்தமாக பெறுக்கி, அழுக்கை போக வைத்து, புது வீடாக தர வேண்டும்.
இந்த அனைத்து விஷயங்களும் வருடத்திற்கு ஒரு முறை என்றால், யோசித்து பாருங்கள். நான் ஒரு முறை மாற்றியதற்கே, கண்ண கட்டிடுச்சு
No comments:
Post a Comment