மண்ணை சார்ந்த படங்கள் வெளியாகும் போது, ஒரு எதார்த்தமான கதையை பார்க்க எதிர்ப்பார்ப்பு உண்டாகிறது. அந்த கதையில் பாமர மக்களின் வாழ்க்கை மற்றும் நம்மை சார்ந்த விஷயங்களை பார்க்கின்றோமா என்பதை பொறுத்தே அதனுடைய வெற்றி. இல்லையென்றால் வந்தும் போனதுமாக இருக்கும். யாருக்குமே தெரியாமல் போய் விடும். மண்ணை சார்ந்த படங்கள் என்று பார்த்தால் வெயில், நந்தா, பருத்தி வீரன், சுப்புரமணிபுரம், தென்மேற்கு பருவகாற்று மற்றும் பல. இப்படங்களில் கதையின் கரு நம் வாழ்வை காட்டும். அதேபோல் நேர்மை, வஞ்சம், பெருமை, குணம், அனுபவம், வழிமுறை மற்றும் சுயமரியாதை என்று அனைத்து அம்சங்களும் கதாபாத்திரங்களின் வழியே காணலாம். இவை அனைத்துமே பாமர மக்களின் எதார்த்தங்கள். இந்த அம்சங்கள் இருந்தால் மட்டுமே வாழ்க்கை படம். இந்த வரிசையில் இப்படமும் இடம் கிடைக்குமா என்ற நினைப்பில் பார்க்க ஆரம்பித்தேன்.
கதைக்கரு: தினம் தினம் நாம் சந்தித்த ஒரு விஷயம். நம்முடன் வேலை செய்பவரை அல்லது தொழில் செய்பவரை விட்டு விட்டு, நம் வாழ்வில் அவர்களை விட முன்னேறும் போது அவர்களின் குணம் மாறும். இதனால் அவர்கள் நம் பக்கத்திலே இருந்து கொண்டு நம் முன்னேறுவதை தடுப்பார்கள். இது நமக்கு தெரியும் செய்யாது. கணிப்பொறி நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் கண்டிப்பாக இந்த அனுபவம் இருக்கும். இதே விஷயத்தை மண்ணின் வாசனையோடு இருப்பது தான் ஆடுகளம். சேவல் சண்டை விடுவதில் அனுபவம் மிக்க ஒருவர், தன்னுடைய சிஷ்யன் தன்னை மிஞ்சி போகும் போது ஏற்படக்கூடிய நிகழ்வுகள் தான் இப்படம்.
இக்கதை ஓடுகின்ற இடம் வைகை நதி புழங்கும் இடம். அதுவும் என்னுடைய இடமான திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகள். மதுரையை சார்ந்த வார்த்தைகள் மற்றும் வசனங்கள் மட்டும் இல்லாமல் பல காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் மதுரையை கண்முன்னே காட்டி மனதில் நிற்கிறது. இயக்குனரின் முதல் வெற்றி அது. முன்பே சொல்லாது போல் நான் பார்த்த சில அம்சங்கள் இப்படத்தில் இருந்து
· திருநகர் போலீஸ் அதிகாரியாக வரும் இன்ஸ்பெக்டர், அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலத்துடன் இருந்தாலும் சேவல் சண்டையில் தோற்ற உடன் மொட்டை அடித்துக் கொண்டு சேவல் சண்டையில் இருந்து விலகுவது மண்ணை சார்த்த "நாக்கு ஒன்னு, சொல்லு ஒன்னு" விஷயம்.
· சேவலுக்கு வைத்தியம் பார்க்கும் அய்யனார் பாத்திரம், விலைக்கு வாங்க முயற்சிக்கும் போது " நீ ஊத்தி கொடுத்த இரண்டு கிளாஸ் சாராயத்துக்கு தான் உன்ன இப்ப விட்டுடு போறேன். எனக்கும் பேட்டைகாரருக்கும் 40 வருஷ பழக்கம்" என்பதும் மண்ணை சார்ந்த விஷயம்.
· தனுஷின் நண்பன் பாரில் பேட்டைகாரர் மீது சந்தேக பட்டு "என்னமோ தப்பு நடக்கு மாப்புள" என்று கூறுவதும், தனுஷ் அதற்கு அவனை அடிப்பதும் எதார்த்த விஷயம்.
பேட்டைக்காரரின் பாத்திரம், பொறாமையால் வாழ முடியாமல் தன்னை கொலை செய்துக்கொண்டு எதிர்ப்பவனை சிக்கவைப்பது என்ற கொடூர தன்மை உடையது. அதற்கு நடிப்பு இருந்தாலும், ராதாரவியின் குரல் தான் பக்க பலம் என்று கூற வேண்டும். இப்படத்தின் இன்னொரு முக்கிய பாத்திரம் கிஷோர். தனுஷ் முன்னேறி வரும் போது உற்ற துணையாக இருப்பதும், பேட்டைக்காரர் தப்பு செய்யும் போது அதை எதிர்த்து கேட்பதும், தனுஷை கொலை செய்ய துடிக்கும் ஆத்திரமும், சபாஷ்.
"ஒத்த சொல்லால" என்ற பாடலில் தனுஷ் ஆடும் ஆட்டம் தான் துள்ளல் என்று இல்லாமல், நம் மனதிலும் துள்ளலை கொடுத்தது ஜி.வி. பிரகாஷின் வெற்றி.
படத்தில் சில குறைகள் இருந்தாலும், பட ஓட்டத்தில் அது தெரியாமல் போய் விடுகிறது என்பது நிதர்சனம்.
இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு மீண்டும் ஒரு வெற்றி. அதோடு இல்லாமல் சன் தயாரிப்பின் முதல் நிஜ வெற்றி படம்.