சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த முக்கிய விஷயம் சூரிய மின் சக்தி பயன்பாடு. அ.தி.மு.க அரசு வரும்போது எல்லாம் ஏதாவது முக்கிய மக்கள் பிரச்சனை கையாளும். சென்ற முறை மழை நீர் சேமிப்பு திட்டம். இம்முறை சூரிய மின் சக்தி. நான் எழுதுகின்ற முறையை பார்த்து அ.தி.மு.க தொண்டன் என்று நினைத்து கொள்ள வேண்டாம். ஒரு லட்சம் மக்களை கொன்ற தி.மு.க அரசு தான், தமிழ் நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை, உலகதரத்தில் சாலைகளை போட்டு உள்ளது. என்ன தான் அவர்கள் கொள்ளை அடித்தாலும், நிச்சயமாக இந்த சாலைகளை போட்டு சென்றதில் அவர்களுக்கு ஒரு பேர் உண்டு. அதே போல் அ.தி.மு.க என்ன தான் பல கொடுமைகளை செய்து இருந்தாலும் மற்றும் செய்து கொண்டு இருந்தாலும், பாரட்ட பட வேண்டிய விஷயம், மழை நீர் சேமிப்பு திட்டம் மற்றும் வர போகின்ற சூரிய மின் சக்தி பயன்பாடு. இந்த மின் பயன்பாட்டில் நான் பார்த்த மற்றும் கேட்ட விஷயங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.
தற்போது தமிழ்நாட்டில் மிகவும் பயன்பாட்டில் இருக்கும் சாதனம் என்றால் அது இன்வேர்டோர் என்று அழைக்கப்படும் ஒரு மின் சாதனம். பாட்டரி மூலம் வீட்டில் இருக்கும் அனைத்து மின்னணு பொருட்களை செயல் பட வைக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு, இந்த இன்வேர்டோர் சாதனம் வெறும் ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் தான் இருந்தது. அதே போல் சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் தான் மின் தொடர்பு இல்லாமல் இருக்கும். ஆனால் இன்று எட்டு மணி நேரம் முதல் பதினைந்து மணி நேரம் வரை, மின் இல்லாமல் இருக்கிறோம். அதனால் இந்த இன்வேர்டோரை அனைத்து மக்களும் வாங்க, அதன் விலை பதினாறு முதல் இருவது ஆயிரம் வரை சென்று விட்டது. இப்போது பணம் கொடுத்தல் மட்டும் தான், நான்கு நாட்களுக்கு பிறகு இன்வேர்டோர் கிடைக்கும். சரி இந்த இன்வேர்டோர் போட்டாலும், பிரச்சனை வேறு விதமாக வந்து விட்டது. இந்த இன்வேர்டோர் பயன்பாட்டிற்கு வர குறைந்தது நான்கு மணி நேரம் மின் இணைப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் இரண்டு மணி நேரம் தொடர்ந்து மின் இருப்பதே இல்லை. அதனால் இன்வேர்டோர் சார்ஜ் ஏறாமல் இருக்கிறது. இன்வேர்டோர் இருந்தும் பயன்படாமல் போகின்ற சூழ்நிலை தற்போது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு வலைதளத்தில் இந்தியாவின் மின் உற்பத்தி பற்றி படிக்கும் போது, கண்டிப்பாக சில வருடங்களுக்கு பிறகு மின் கண்டிப்பாக பற்றாமல், மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சனை போல பெரியதாக வெடிக்கும் என்றும், அதனை போக்க சூரியமின் சக்தியே கையில் இருக்கும் ஒரே தீர்வு என்று கூறபட்டு இருந்தது. சூரிய மின் சக்தி என்பது அரசு கையில் மட்டுமே இருக்கும் என்று நம்பாமல், நாமே முன் நோக்கி எடுத்து வைக்க வேண்டும் என்றும் இருந்தது. அதனால் அப்போதே, நான் இந்த சூரிய மின் சக்தியை பற்றி விசாரிக்க தொடங்கினேன். இணைய தளத்தில், படித்த வரை வீட்டிற்கு சுமார் இரண்டு லட்சம் வரை செலவு ஆகும் என்றும், வெயில் காலத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் இன்வேர்டோர் வீட்டின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பத்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டி இருந்தது. தேவை இல்லாமல் பத்தாயிரம் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்து போடாமல் இருக்கும் போது, இரண்டு லட்சம் என்ற உடன், பின் வாங்கி விட்டேன்.
இப்போது என் நண்பர்கள் குழுவில், தீடிர் என்று இந்த சூரிய மின் சக்தியை பற்றி பேச்சுகள் வரவே, மீண்டும் பழைய படி நான் விசாரிக்க தொடங்கினேன். சூரிய சக்தி வீட்டு உபயோகத்திற்கு செய்து தரும் ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, கீழ் கண்ட விஷயங்கள் தெரியவந்தன.
- வீட்டின் பயன்பாட்டிற்கு சூரிய சக்தியை கொடுக்க, 1000w க்கு நிறுவனம் மூன்று லட்சம் ஆகும் என்று கூறியது.
- மின் விசிறி, மின் விளக்கு, கணிபொறி மற்றும் தொலை காட்சிக்கு மட்டுமே இந்த 1000w பயன்படும்
- இதை தவிர வரியை தனியாக கட்ட வேண்டும் என்றும் அதை பொருத்துவதற்கு தனி செலவு என்றும் கூறியது
- இந்த 1000w அரசு தரும் மானியம் ரூ. 81 ஆயிரம். மானிய பணத்தை முதலில் நாம் கையில் இருந்து போட வேண்டும். சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு, அப்பணம் நம் கைக்கு திரும்ப வரும்.
கூட்டி மற்றும் கழித்து பார்த்தல், நம் கையில் இருந்து சுமார் 2.5 லட்சத்தை போட வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டம் வரும் போது சுமார் ரூபாய் பத்தாயிரம் தான் செலவு ஆனது. அதனால் பாமர மக்கள் எப்படியோ சமாளித்து விட்டனர். ஆனால் இப்போது 2.5 லட்சம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அரசு தரும் மானியம் கூட்டினாலும், பாமர மக்கள் கண்டிப்பாக இதை நிறுவ மாட்டார்கள் என்பது உறுதியாக சொல்லலாம். இப்போது தமிழக அரசு அறிவித்த விஷயத்தில், எப்படி பாமர மக்கள் இதை பயன் படும் படி செய்ய போகிறார்கள் என்பதை கூறவில்லை. மறுபடியும் இந்த மானியம் மக்களின் உழைப்பை உறுஞ்சும் பெரிய நிறுவனங்களுக்கே சென்று அடையும் நிலைமை.