Friday, June 10, 2011

San Antonio,TX - பயணம்


ஊர் சுற்றி பார்க்க சென்று பல நாள் ஆகிவிட்டதே, எங்கு செல்லலாம் சென்று நினைக்கையில் தோன்றியது சண்-அன்டோனியோ. என் இடத்தில் இருந்து 10 மணி நேரம் என்றாலும், நண்பர் கார்த்திக்கும் சேர்ந்து செல்ல வேண்டும் என்றால் 13 மணி நேரம் ஆகி விடும் என்பதால், முதல் நாள் இரவே அவர் வீட்டிற்கு சென்று, அங்கே இருந்தே பயணத்தை தொடரலாம் என்று முடிவு ஆகி, 593 மைல்கள் (954 கிலோ மீட்டர்) என்ற இலக்கை வைத்துக் கொண்டு ஆரம்பித்தோம். நாங்கள் பயணம் செய்த வாரம், 3 நாட்கள் விடுமுறை என்பதால், சாலை செல்லும் அனைத்து இடங்களிலும் கூட்டம். இரண்டு பேர் மட்டும் காரை ஒட்டிக் கொண்டு பத்து மணி நேரத்தில் நண்பர் கிஷோர் வீட்டை அடைந்தோம். நாங்கள் பயணம் செய்த தூரத்தை பார்த்தால், பெங்களூரில் இருந்து மும்பை பயணம் செய்யும் தூரம். அனைத்து இடர்பாடுகளையும் கடந்து பத்து மணி நேரம் என்பது ஆச்சிரிய படகூடிய பயணம் தான்.



அமெரிக்கா வந்து பல மாதங்கள் சென்று விட்டாலும், தண்ணீர் விளையாட்டுகளில் பங்கேற்காத குறை இருந்தது. அதனால் இங்கு கண்டிப்பாக தண்ணீர் விளையாட்டு செல்ல வேண்டும் என்பதற்காக, பல இடத்தை பற்றி விசாரித்து இரண்டை தேர்ந்து எடுத்து,  முடிவு செய்தோம். இன்னொரு நண்பர் மேனன் வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ள, அன்று முழுவதும் தண்ணீர் விளையாட்டுகளில் சென்றது. இங்கு தான் அமெரிக்கா மக்களின் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பதை பார்க்க முடிந்தது.


அடுத்த நாள் கார்பஸ் கிருஷ்டி என்ற கடற்பகுதிக்கு செல்லலாம் என்றும், அதற்கு முன்னால் போர்ட் அர்கன்சாஸ் என்ற ஒரு கடற்தீவுக்கு செல்லலாம் என்ற முடிவாகி, மீண்டும் அங்கிருந்து மூன்று மணி நேர பயணத்தை தொடங்கினோம். இந்த இடத்திற்கு விஷேசம் என்ன வென்றால், இங்கு இருந்து மெக்ஸ்சிகோ என்ற நாடு மிக அருகில். அதனால் மெக்ஸ்சிகோ இன மக்களை அதிகமாக காணமுடியும். அமெரிக்கா வெள்ளை, மற்றும் கறுப்பின மக்களை காணும் போது, மெக்ஸ்சிகோ மக்களை கண்டால், இந்திய மக்களின் நிறத்துடன், நம் மக்கள் போன்ற முக அமைப்பு இருக்கும் என்பதால் ஒரு மகிழ்ச்சி.



இந்த போர்ட் அர்கனசாஸ் செல்ல இரண்டு வழி என்றும், இரண்டு வழியையும் பார்க்க வேண்டும் என்ற முடிவெடுத்து, முதல் வழியை காணும் போது ஆச்சிரியத்தின் உச்சிக்கு என்றேன் என்றால் அது மிகை அல்ல. கடற்தீவிற்க்கு கடலை கடந்து செல்ல வருகின்ற அனைத்து வாகனத்தையும் வரிசையாக நிறுத்தி, ஒவ்வொன்றாக நாமே படகில் ஏற்ற வேண்டும். படகு தீவு கரைக்கு சென்ற உடன், நாமே வாகனத்தை வெளியே எடுத்து கொண்டு செல்ல வேண்டும். இந்த அனுபவம் நான் பார்க்காத ஒன்று என்பதால், வெளியில் சொல்லாத மகிழ்ச்சி.

Sample Jet Skis... Not mine


அங்கு வேறு என்ன செய்யலாம் என்று நினைத்து கொண்டு இருக்கையில், கடலில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டினால் என்ன என்று முடிவெடுத்து, இரண்டு பைக்கை எடுத்துக் கொண்டு கடலில் மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அனுபவத்தை பெற்றேன். நமக்கு நீச்சல் தெரியாது என்ற ஒரு குறை இருந்தாலும், நீச்சல் தெரிந்த மக்களே, கடலை பற்றி ஒரு முறை யோசிக்கும் போது, நீச்சல் தெரியாமல் பைக்கை ஓட்டினேன் என்றால், அது எனக்கு பெரிய விஷயம் தான். சென்னையிலே இந்த மாதிரி அனுபத்தை பெற முடியும் என்ற கேட்ட பிறகு, அதையும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்து ஆகி விட்டது.


நாங்கள் இருப்பது கடற்பகுதி என்பதால், இரவு கடல் உயிர் உணவு. ஹாலிவுட் திரைப்படத்தில் காணும் ஒரு நட்சித்திர உணவு உண்ணும் இடத்தின் அமைப்பு நாங்கள் சென்ற உணவு விடுதி. கடல் போல் அந்த விடுதி. உணவு உண்ணும் இடத்தில் இருந்து பார்த்தால், ஒரு புறம் கடல். மறுபுறம் வானை தொடும் கட்டிடங்கள். நடுவில் அதுவும் கடல் மேல் நாங்கள் இருக்கும் விடுதி. எங்களுக்கு அருகில் அமெரிக்கா வெள்ளை இன மக்கள், மெக்ஸ்சிகோ மக்கள் எங்களுக்கு உதவி செய்கின்றனர். சொல்ல முடியாத ஒரு வித அனுபவம்.


நாங்கள் சண்-அன்டோனியோவில் இருந்து திரும்பும் போது, ஆஸ்டினில் அவரது குடும்பத்துடன் வசிக்கும் எங்களது பொறியியல் கல்லூரி தோழி இந்திரதேவியின் வீட்டிற்கு நானும், தோழர் கார்த்திக்கும் சென்றோம். அவர்கள் உபசரித்த விதம், நிறைவான மதிய உணவு என்று பார்த்த போது, எங்களுடைய பயணம் ஒரு நிறைவாக முடிந்ததாகவே தோன்றியது.

என்னுடைய முன்னால் அலுவலக தோழர் பாஸ்கர் அங்கு தான் தங்கி இருக்கிறார் என்று நேற்று தான் தெரிந்தது. முடிந்தால் அவரையும் ஒரு முறை சென்று பார்த்து இருக்கலாம்.  மீண்டும் பத்து நேர பயணத்திற்கு பிறகு, லிட்டில் ராக் வந்து சேர்ந்தோம். மூன்று மணி நேர தூக்கத்திற்கு பிறகு நான் என்னுடைய இடத்திற்கு திரும்ப மூன்று மணி நேர பயணத்தை தொடங்கினேன்.

No comments: