Sunday, March 28, 2010

புது பயணம்...

வாழ்க்கை என்னும் இரயில் பயணத்தில் நாம் பல்வேறு வகையான மனிதர்களை சந்திக்கின்றோம். இதன் மூலமாக பல்வேறு புதுமையான வாழ்க்கை அனுபவத்தை கற்கிறோம் மற்றும் நல்ல நண்பர்களை பெறுகிறோம். அடுத்த கட்ட இரயில் பயணத்தின் போது காலத்தின் கட்டாயமாக பழகியவர்களை பிரியநேரிட்டு அதற்கு பதிலாக புது மனிதர்களை சந்திக்கின்றோம். அப்படி என்ன புது பயணம்? இது நாள் வரையில், அனைத்துக்கும் பணம் என்ற நிலையில் இருக்கும் சென்னையிலும், அவ்வபோது தென் இந்திய மாநிலங்கள் ஆன கேரளா, கர்நாடகம் மற்றும் தெலுகுதேசம் என்று சென்று இருந்தாலும், பல கோடி இந்திய மக்களின் கனவு நாடான அமெரிக்காவிற்கு எனது பயணம் ஆரம்பிக்கின்றது.

இந்நிலையில் கடந்த பயணத்தில் என்னுடன் பயணம் செய்த தோழர்களை (முக்கியமாக சதீஷ், மாதவன், நாகூர், கிருஷ்ண மற்றும் பத்மன்) மறுபடியும் சிந்திப்போம் என்று தெரிந்தாலும், எப்போதும் என் மனதில் அவர்களுக்கு ஒரு இடம். அதே போல் என்னை வழியனுப்ப வந்த நண்பர்கள் பாலாசுப்பிரமணியன், சுந்தர், கார்த்திக் சந் அவர்களுக்கு நன்றி...


Air India

எனது பயணம் சென்னையில் ஆரம்பிக்கும் போது விமானநிலையத்தை பார்த்து ஆச்சரியப்பட்டது உண்மை தான். ஆனால் அது மும்பை விமானநிலையத்தை பார்த்த உடன் காணமல் போனது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் சென்னை, மும்பை போல் ஆகும் என்ற நம்பிக்கை எனக்குள் பலமாக இருந்தது (மும்பை பார்க்காமலே). ஆனால்  மும்பை விமானநிலையத்தை பார்த்த உடன் கண்டிப்பாக பல வருடங்கள் ஆகும் என்று தெரிந்துவிட்டது. மும்பையில் இருந்து என் விமானம் ஜெர்மன் நாட்டில் உள்ள பிரான்க்பெட்க்கு சென்றது. சில வருடங்களுக்கு முன்னால் ஜெர்மன் மொழியை கற்ற போகிறேன் என்ற பெயரில் இந்த மொழியை பற்றி அறிந்து வைத்து இருந்ததால் எனக்கு மனதில் சிறு மகிழ்ச்சி. ஆனால் அங்கு சோதனை என்ற பெயரில் செய்த மிக கேவலமான முறையை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. சென்னையிலும், மும்பையிலும், அமெரிக்காவிலும் செய்த சோதனைகளை விட மோசமான சோதனை... அங்கு ஒரு முடிவு எடுத்தாகிவிட்டது அடுத்த எந்த ஒரு பயணத்திலும் கண்டிப்பாக ஜெர்மன் வழியாக பயணம் கூடாது என்பது தான்.

நான் அர்கன்சாஸ் என்னும் மாநிலத்திற்கு தான் செல்ல வேண்டும். எனது பயணம் ஒரு வழியாக அமெரிக்காவின் முக்கிய மாநிலமான சிக்காகோவிற்கு வந்தது. முதன் முதலில் வெள்ளை நிற மனிதர்கள் என்னை சுற்றிலும். என் மனதில்  2002ம் ஆண்டின் மதுரை பெரியார் பேருந்து நிலையம் வேகமாக வந்து நிற்கிறது. வாழ்க்கையின் ஓட்டத்தை பார்த்து பிரம்மித்து கொண்டு இருக்கும் வேளையில் அடுத்த ஆச்சிரியம். விமானத்தில் பறக்கும் போது எங்கும் ஒரே வெள்ளை நிறமாக தான் தெரிந்தது... நான் அர்கன்சாசில் விமானம் நின்ற பின்னும் ஒரே வெள்ளை நிறம். ஆம் அனைத்தும் பனி..முதல் முறையாக பனி படர்ந்து இருக்கும் இடத்தில் என்று என்னும் போது உடல் குளிரும் வேளையில், மனமும் குளிர்கிறது என்பது உண்மை தான்

அனுபவங்கள் மற்றும் பதிவுகள் புது உலகத்தில் இருந்து தொடரும்..

Friday, March 19, 2010

என் அருகில் நீ இருந்தால்


வெயில் காலம் உனக்கு.. எனக்கோ பனி காலம்

பூக்களின் மத்தியில் நீ.. போர்களத்தின் மத்தியில் நான்

பருகும் தண்ணீர் உனக்கு.. எனக்கோ அமிர்தம்

பாண்டியன் பேருந்து உனக்கு...எனக்கு இந்திர வாகனம்

நீ சாதாரண பெண் மற்றவருக்கு.. தேவலோக தேவதை எனக்கு

எல்லாம் நீ என் அருகில் இருந்தால்.


இது உன் தங்கைக்கும் பொருந்தும்

Thursday, March 18, 2010

திருமண வாழ்த்துக்கள் - சக்தி அபிராமி

எனது தற்போதைய அலுவலக நண்பர் சக்தி அபிராமி அவர்களுக்கு இன்று 18ம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

திருமண வாழ்த்துக்கள் - பத்ரிநாத்

எனது பழைய அலுவலக நண்பர் திரு. பத்ரிநாத் அவர்களுக்கு இன்று 18ம் தேதி சென்னையில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

Wednesday, March 17, 2010

யார அண்ணே லவ் பண்றிங்க? - சிறுகதை

காலை ஆறு மணி அலாரம் அடித்தவுடன் குமார் பரபரப்புடன் எழுந்து நேராக கண்ணாடி முன் சென்று தலைவாரி அவன் அறையில் உள்ள சன்னல் பக்கத்தில் புத்தகத்துடன் போய் நின்று கொண்டான். இச்செயல் கடந்த ஒரு வருடமாக தொடர்கிறது. சுருங்கி இருந்த அவனது கண் எதையோ தேடி கொண்டு இருந்தது. ஐந்து நிமிடம் கழித்து, அவன் கண் விரிய தொடங்க மனதில் பல வண்ண பட்டாம் பூச்சியின் கூட்டம் பறக்க, அதற்கு காரணமான எதிர் வீட்டு உஷா மாடி படியில் ஏறி கொண்டு இருந்தால். குமார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன். உஷா அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. எதிர் வீட்டில் பார்த்த போதே மனதை தொலைத்து விட்ட குமாருக்கு கல்லூரியில் அவளை பார்த்த உடன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தான். என்ன தான் ஒரே கல்லூரி மற்றும் எதிர் வீடு என்றாலும், இரண்டு வீட்டின் பிரச்சனை காரணமாக அவர்கள் பேசியதில்லை. அவன் கல்லூரியில் பேச முயற்சி செய்தாலும், அவளை பார்த்த உடன் பேச முடியாமல் மின்னுக்கு வந்து விடுவது வழக்கம்.

குமாரின் நண்பர்கள் அவனிடம், "டேய் மாப்பிள அடுத்த வருஷம் பைனல் இயர். இப்ப போய் கரெக்ட் பண்ண தான் ஒரு வருஷமாச்சு காலேஜ் லவ் லைப்எ என்ஜாய் பண்ணலாம். இத விட்ட போச்சு மாப்பி.. பாத்துக்கோ" என்று பல்வேறு கோணங்களில் அவனிடம் சொல்லி பேச வைக்க முயலுகின்றனர். குமாரும் இதை அறிந்து இருந்ததினால் இம்முறை தன் காதலை கண்டிப்பாக சொல்லி விட வேண்டும் என்று நினைத்து ஒரு காதல் கடிதம் ...

கடிதத்தை கொடுக்க அவள் எப்போதும் தன் நண்பிகளுடன் பழசாறு குடிக்கும் பழமுதிர்சோலையை தேர்ந்து எடுத்து அவள் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் போய் சேர..  இதயம் நின்று இருக்கிறது... ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாக...

குமாரின் அதிர்ஷடம் காரணமாக அவள் மட்டும் தனியாக முதலில் வர, குமாரின் கால்களும் அவளை நோக்கி முன்னோக்கி செல்ல.. எப்படியோ தைரியத்தை வரவழைத்து கொண்டு அவள் முன்னால் நிற்க அவள் சிறு புன்னகையுடன் "ஹாய்" என்கிறாள். பதிலுக்கு அவனும் "ஹாய்" கூற பேச்சு தொடர்கிறது. சில நிமிட கடலைக்கு பிறகு தன் பையில் இருந்த கடிதத்தை அவளிடம் நீட்ட, அவள் படித்து விட்டு கேட்ட கேள்வி அவன் மனதை எரிமலை போல் வெடிக்க செய்தது... அவள் கேட்ட கேள்வி..."அண்ணே, யார அண்ணே லவ் பண்றிங்க?..."

Tuesday, March 16, 2010

நெஞ்சம் மறப்பதில்லை

1963ம் ஆண்டு வெளிவந்த  திகிலூட்டும் சம்பவங்கள் மற்றும் அருமையான பாடல்கள் நிறைந்த அற்புதத் திரையோவியம். முற்பிறவியில் ஒன்று சேர முடியாத இளம் காதல் ஜோடிகள் மறுபிறவியில் இணைகின்றதை எடுத்துச் சொல்லும் அற்புதமான காதல் கதை.

அக்காலத்தில் திகில் படம் என்றாலே இப்படம்நெஞ்சம் மறப்பதில்லை" தான். அதிலும் வில்லனாக வாழ்ந்து காட்டிய உயர்திரு நம்பியாரின் நடிப்பு ஈடு இணையற்றது. இப்படத்தில் நடித்ததற்க்ககவே கல்யாணகுமார், தேவிகா, நாகேஷ், மனோரமா, எம்.என்.நம்பியார், மாலி, கரிக்கோல்ராஜ், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஜெமினி பாலகிருஷ்ணன், மகாலிங்கம், பத்மினி பிரியதர்சினி, சீதாலட்சுமி ஆகியோர் பெருமை பட்டனர் என்பது வரலாறு. பாராட்டப்பட்ட வேண்டிய இருவர் ஸ்ரீதர் மற்றும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி..

இப்படத்தில் வரும் முக்கிய காட்சி 109 வயதில் தன் மகனை அதுவும் மகனின் அடுத்த ஜென்மத்தில் பார்க்கும் போது, நான் தன் அந்த "ஜாமீன்தார்" என்று கூறும் காட்சியில் பலர் பயந்து மயக்கம் அடைந்ததுண்டு. அக்காட்சி இதோ.




இப்படத்தை நான் இணையத்தில் தேடி இக்காட்சியை மட்டும் எடுக்க மூன்று  மணிநேரம் மேல் ஆனது.

Monday, March 15, 2010

மதனகோபாலசுவாமி திருக்கோயில்

பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள இக்கோவில் சுமார் 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது என்று பார்த்த உடன் கூற முடியும்.  மதுரையில் உள்ள மிக முக்கிய கோவில்களில் இதுவும் ஒன்று.  இக்கோவிலில் சிறிய கோவில் என்றாலும் பெருமாள் உடைய சிற்பங்கள் மற்றும் பல்வேறு அவதாரங்கள் பற்றி பல விஷயங்கள் உள்ளன.  இக்கோவிலின் சிறப்பு அம்சம்  என்னவென்றால்  சில வகை ஜாதி மக்களின்  "பெண்" பார்க்கும் படலம் எப்போதுமே இங்கு தான் நடக்கும். இதை தவிர இக்கோவிலின் முழுவிபரம்கீழே..


=================

 தல சிறப்பு:

மூலவர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூப கண்ணனாக பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர்.

பிற தகவல்கள்

கோயிலில் நுழைந்தவுடன் இடதுபக்கம் அரசமரத்தடியில் முழுமுதற்கடவுளாக விநாயகர் அமர்ந்திருக்கிறார் மூலவர் மதனகோபால சுவாமி.வாழை தல விருட்சம் , மூலவர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூப கண்ணனாக பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார்.  அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர்.

மதுரவல்லி தாயார் தனிசன்னதியிலும், ஆண்டாள் தனி சன்னதியிலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.

நவநீதகிருஷ்ணன், சேனை முதல்வர், கருடாழ்வார், நம்மாழ்வார், உடையார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரை இத்தலத்தில் நாம் தரிசிக்கலாம். கருவறையை கடக்கும் வழியில் ராமர் தனிசன்னதியில் காட்சி தருகிறார்.
மேலும் சக்கரத்தாழ்வார், லட்சுமி  நரசிம்மர், ஹரி ஹர ஸர்ப்ப ராஜா, பஞ்ச முக ஆஞ்சநேயர் என ஒவ்வொருவரும் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கின்றனர். குழலூதும் கண்ணன், ராமானுஜர் சன்னதியும் உண்டு.

பிரார்த்தனை

மேலும் இசையில் நாட்டம் உடையவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வதால் இசை மேதை ஆகலாம் என்றும், இத்திருத்தலத்தில் அறுபதாம் கல்யாணம் செய்பவர்களின் சந்ததி சிறப்பு பெறும் என்றும் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
இங்குள்ள நாக தேவி, ஹரி ஹர ஸர்ப்ப ராஜா என அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளி தோறும் ராகு கால பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.
நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

தலபெருமை

ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் வந்து இங்கு எழுந்தருளி மதனகோபாலரை தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், பின் ஆண்டாள் அரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்றும் வரலாறு கூறுகிறது.

தல வரலாறு

ஒரு முறை சிவன், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்து விட்டு சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் லிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவன், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவனின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததை கூறி இந்த உலகைகாக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. உடனே தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம் சிவனின் செவிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இசைக்கு மயங்கிய சிவன் கண் விழிக்கிறார். தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது.
சிவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் ""மகாவிஷ்ணு, தாங்கள் எப்போதும் மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும்'' என்றார். மகாவிஷ்ணுவும் சிவனின் விருப்படியே, மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில், மதன கோபால சுவாமி என்ற கோயிலில் வீற்றிருந்து புல்லாங்குழல் இசைத்து சிவனையும் மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்புரிகிறார்.

நன்றி தினமலர்

=================

Sunday, March 14, 2010

உலக தண்ணீர் தினம் - மார்ச் 22

உலக தண்ணீர் தினம் வரும் மார்ச் 22ம் தேதி வருகிறது. அதை நினைவூட்டும் விதமாக இப்பதிவு.. தண்ணீரின் முக்கியத்துவத்தை இப்படம் காட்டுகிறது. இதை ரசிப்பதோடு இல்லாமல் நடைமுறை படுத்துவோம்.

திருமண வாழ்த்துகள் - செந்தில் சகா

எனது உற்ற நண்பர் திரு. செந்தில் சகா அவர்களுக்கு பிப்ரவரி மாதம்  25ம் தேதி சேலம் ஆத்தூரில்  திருமணம் நடைப் பெற்றதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

நான் கண்டிப்பாக நேரில் சென்று வாழ்த்த நினைத்த மணமக்களில் இவர்களும் ஒருவர். ஆனால் மிக முக்கிய வேலை காரணமாக
, என்னால் நேரில் செல்ல முடியவில்லை என்பதால் வருந்துகிறேன்..

தமிழில் திருமண பத்திரிக்கை

இன்றைக்கு எனக்கு தொழில் முறை நண்பரின் திருமண பத்திரிகை கிடைத்தது. அதில் தமிழில் சில வாக்கியங்களை கண்டு குறுகி போனேன்.. அச்சொற்கள் தமிழில் இருந்தும் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை... இதோ அந்த வாக்கியங்கள் கீழே... குறிப்பாக இது கவிதையும் இல்லை, சமஷ்கிரிதத்திலும் இல்லை மட்டும் தெளிவாக தெரிகிறது என்று நம்புகின்றேன்...

அன்னவளை, 'அல்லல்' என, 'ஆம்' என, அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்,
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியோடு உழைத்து, ஆண்டு,
இன் அமிழ்து எழ, களி கொள் இந்திரனை ஒத்தான்..

படர்ந்து ஒளி பறந்து உயிர் பருகும் ஆகமும்,
தடந் தரு தாமரைத் தாலுமே, அல;
கடம் தரு மா மதக் களி நல் யானைபோல்,
நடந்தது, கிடந்தது என் உள்ளம் நண்ணியே.

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினர்.

கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்,
கல்வி கரை உற்ற முனி கெளசிகனை, 'மேலாய்!
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மணநாள் ஆம்,
எல்லையில் நலத்த, பகல் என்று? உரைசெய்க!' என்றான்.

மன்னரும், முனிவரும், வானுளோர்களும் ,
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்,
துன்னினர் துவன்றலின், சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல் கூடமே.


இந்திரன் சசியொடும் எய்தினான்; இளஞ் சந்திர மெளலியும் தையலாளொடும்
வந்தனன்மலர் அயன் வாக்கினாளுடன் அந்தரம் புகுந்தனன் ; - அழகு காணவே

புரிஞ்ச மீனிங் சொல்லுங்கப்பா... இத டைப் அடிக்கவே கண்ண கட்டிரிச்சு...வர வர கல்யாண பத்திரிக்கையே ஏன் இப்படி எல்லாம் புரியாத பாஷையில இருக்குன்னு தெரியல..

அமையுமா நமக்கு??



சமீபத்தில் பார்த்த மற்றும் மனதை தொட்ட ஒரு சின்ன காதல் கதை...

எனது நண்பர்கள் சிலபேர் புத்துணர்ச்சி இல்லாமல் காலையில் வேலைக்கு போவதை பார்த்து உள்ளேன். இக்குறும்படத்தில் வரும் நாயகன் கூட இப்படி வருவதை பார்த்தல் நிஜத்தில் இக்கதை நடப்பது போலவே ஒரு உள்ளுணர்வு... இப்படி சில விஷயங்கள் இதில் உண்டு... கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்....

Wednesday, March 03, 2010

சும்மா.. திருப்புரங்குன்றம்...

ஒரு பெரிய வி.ஐ.பி கார் ஒன்று, எனக்கு எதிரில் வந்து கொண்டு இருந்தது... அக்கார் ஒரு அரசியல்வாதியின் கார் என்றும், அதில் உள்ளே இருக்கும் நபர் கண்டிப்பா ஒரு ரவுடி என்றும் பார்த்தாலே தெரிந்து விடும்.. அது போக முன்னால் ஒரு கார். என்னை சுற்றி இருந்த சில பேர் கூட அக்காரையே பார்த்து கொண்டு இருந்தனர். நான் நின்ற இடத்திற்கு அக்கார் வேகமாக வந்துக் கொண்டு இருந்தது. பெரிய காரில் முன் சீட்டில் அமர்ந்து கொண்டு இருக்கும் நபர், கை தொலைப்பேசியில் பேசி கொண்டும்பின்னால் அமர்ந்து இருக்கும் சில பேரிடம் பேசி கொண்டும் வந்து போது அனைவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம்...

அடுத்து என்ன நடக்கும்...

நான் நின்று இடத்திற்கு பக்கத்தில், கார் மெதுவாக நெருங்கி வர வர அனைவரின் பார்வையும் அக்காரின் மீதே...  அந்த ஒரு வினாடியில் கையில் இருந்த தொலைப்பேசியை முன் சீட்டில் இருந்த நபர், தீடிர் என்று தன் மாடியில் வைத்து  இரு கையை எடுத்து எனக்கு அருகில் இருந்த திருப்புரங்குன்றத்தின் நுழைவுவாயிலை கும்பிட்டு அக்கார் என்னை கடந்து சென்றது...என்னை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் அக்கார் போன உடன், தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

மொத்தத்தில் நான் சொல்ல வந்தது, நான் திருப்புரங்குன்றம் கோவிலுக்கு போனது தான்...

இவ்வளவு பெரிய கோவிலில் இந்த அளவு மக்களை நான் பார்த்தே இல்லை... அங்கு அங்கு ஒரு குடும்பம்.. இரண்டு அல்லது நான்கு வயதானவர்கள்..வயதானவர்கள் மட்டும் வணங்கிடும் விதத்தை எதிர்பாரா விதமாக பார்த்தேன்... அவர்கள் கோவிலில் உள்ள ஒரு சில தூண்களை மட்டும் வணங்கி மற்றும் சுற்றி வந்தனர். பல முறை சென்ற நான் அத்தூண்களை கண்டு கொண்டதே இல்லை... அவர்கள் சென்ற உடன், நானும் தூண்களை போய் பார்த்தேன்.. இரண்டு சிலைகள் இருந்தன. அவற்றின் பெயர் தெரியவில்லை...ஆனால் அவற்றை இக்கோவிலில் பார்த்தது கிடையாது... ஆச்சிரியமான விஷயம்...

மூலவரை போய் பார்த்தோமா, மனசார சாமி கும்பிட்டு ஒரு திருப்தியோட வெளியில் வந்தாச்சு...இதுவே சென்னையில் உள்ள எதாச்சு ஒரு பெரிய கோவிலில்ன இது முடியுமா..முடியவே முடியாது...சாமியிர் மொத கொண்டு காச புடுங்கி தின்கிறதுல குறியா இருந்துப்பங்க...