Saturday, July 25, 2009

திரைவிமர்சனம்

12 ரௌண்ட்ஸ் (ஆ)

ஒரு தீவிரவாதியை ஒரு போலீஸ் பிடிக்கும் போது, எதிர் பாராவிதமாக தீவிரவாதியின் காதலி இறந்துவிட... அதே தீவிரவாதி ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் வந்து அதே போலீஸ்சை கொல்ல நினைக்க, அதற்கு பொது மக்களையும் & மனைவியும் பலியாடாக வைத்து மிரட்ட... எப்படி தீவிரவாதி இறக்கிறான் அனைவரும் எப்படி மீண்டனர் என்பது கதை.

பல திரைப்படங்களை பார்த்ததாக நினைக்க தோன்றுகிறது.

நோயிந் (ஆ)

50 வருடத்திற்கு முன்னால் ஒரு சிறு பெண்ணால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் உலகில் ஏற்படும் முக்கிய அழிவுகளும், உலகம் அழியும் நேரம் குறிப்பிட பட்டு இருக்கும். அது உண்மையா இல்லையா... புது உலகம் இருக்குமா? என்று கேள்விகளுக்கு விடை சொல்லும் திரைப்படம். திரில்லராக எடுக்கப் பட வேண்டியது, ஆனால் எழுதுகின்ற அளவிற்கு இல்லை.

நாடோடிகள்

சுப்ரமணியபுரம் திரைப்பட வழியில் (நடிப்பு, கதை, நடிகர்கள்) இருந்தாலும், இதன் வலு கதை தான். இப்படம் மிக மிக குறைந்த வேகத்துடன் போனாலும், கதை அனைவரையும் கட்டி போடுகிறது. இத்திரைப்படம் பார்த்த பிறகு நண்பர்கள் யாரேனும் நம்மிடம் காதலுக்கு உதவி என்று கேட்டு வந்தால், கண்டிப்பாக சிறிது நேரம் சிந்திக்க தோன்றும்...இப்படி சிந்திக்க வைத்தது தான் இத்திரைப்படத்தின் வெற்றி.

அனைவரும் நன்றாக நடித்து இருந்தாலும், என் மனதில் நிற்பது சசிகுமார் மற்றும் கஞ்சா கருப்பு. கஞ்சா கருப்பின் புலம்பல் கண்டிப்பாக சிரிக்க வைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

மாயாண்டி குடும்பத்தார்

வானத்தை போல, ஆனந்தம் போன்ற அண்ணன், தம்பி உறவுகளை பற்றி திரைப்படம் பார்த்து ஆகி விட்டத்தால் என்னவோ ஆண் இயக்குனர்களின் படம் மனதில் நிற்க மறுக்கிறது. திரைப்படத்தில் அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர் நாயகன், நாயகியை தவிர.

தமிழ் சினிமாவின் கதை என்பதால், கொலை செய்யும் நோக்கத்தில் இருக்கும் அனைத்து உறவுகளும் கடைசியில் சேர்ந்து விடுகின்றனர். மதுரை மாவட்டம் மற்றும் அதன் அருகில் எடுத்தால் படம் ஓடி விடுமோ (திரை அரங்கத்தை விட்டு அல்ல) என்ற எண்ணத்தில் எடுத்த படம் என்று தோன்றுகிறது.

-- சன் தயாரிப்பில் வெளிவரும் படங்கள், சுந்தர் சி நடிக்கும் படங்கள், பேரரசு இயக்கம் படங்கள் - ஒப்பிடும் போது இப்படம் மிக நன்றாக உள்ளது.

என்னத்த சொல்ல - நல்ல விஷயம்

எனது பதிவுகளைப் பார்த்து எனது தொழில்நுட்ப கல்லூரி நண்பர் குமரேஷ் அவர்களும், பதிவு உலகில் கால் வைத்து இருக்கிறார். பெருமைப் பட வேண்டிய விஷயம்.

எனக்கு ஊக்கம் அளித்த நண்பர்கள் அனைவரும், அவருக்கும் ஊக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நண்பரின் பதிவு: http://bewithbk.blogspot.com/

திருமண வாழ்த்துகள் - பிரகாஷ் உதயக்குமார்

எனது பழைய அலுவலக நண்பர் திரு. பிரகாஷ் அவர்களுக்கு இம்மாதம் 26ம் தேதி திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

இவரது திருமணம் கோயம்புத்தூரில் நடைப்பெறுகிறது. எனது தனிப்பட்ட வேலையின் காரணமாக திருமணத்திற்கு செல்ல முடியாததை நினைத்து வருந்துகிறேன்

மன கேள்வி

பெருமாள் கோவிலில் இருக்கும் சக்கரத்தாழ்வார் என்பது யார்? பெருமாளுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? இவர் பின்னால் ஏன் யோகா நரசிம்மர் இருக்க வேண்டும்..

திருமண வாழ்த்துகள் - ஷகுல்

எனது பழைய அலுவலக நண்பர் திரு. ஷகுல் அவர்களுக்கு இம்மாதம் 12ம் தேதி திருமணம் ஆனதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

இவரது திருமணம் தென்காசி அருகே உள்ள கடையநல்லூரில் நடைபெற்றது. எனது ஊரான திருநகர், அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்புரங்குன்றம் அருகில் தான் உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இப்போது தான் அங்குள்ள இரயில்வே நிலையத்திற்கு சென்றேன். சென்னையில் புறநகர் இரயில் எப்படி பயன்படுகிறதோ, அதே போல் செங்கோட்டைக்கு செல்லும் இந்த இரயிலுக்கும் கூட்டம். மூன்று மணி நேர பயணத்தில் கடையநல்லூர் அடைந்தேன். முஸ்லிம் மத முறைப்படி திருமணம் நடைப்பெற, அவர்களுக்கு உரித்தான மதிய உணவு :) ஆட்டு பிரியாணி, கோழி வறுவல் என களைகட்டியது. ருசியே ருசி. அடுத்த ஒரு மாதத்திற்கான பிரியாணி, ஒரு வேளை சாப்பாட்டுடன் முடிந்தது.

என்னதான் வெயில் அடித்தாலும், தென்காசி அருகில் இருப்பதால் அதிகபடியான சூடு தெரியவில்லை. மீண்டும் அரசு பேருந்தை பிடித்து, மதுரைக்கு வந்து ஆகி விட்டது. பலமுறை தென்காசிக்கு சென்று இருந்தாலும், இந்த முறை பகலில் பிரயாணம் என்பதால் பல புது ஊர்களை பார்த்தது போல் இருந்தது. கடையநல்லூர் ஊரை சுற்றிப் பார்க்க முடியாமல் போனதால், மீண்டும் அவ்வூருக்கு செல்லும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.

Saturday, July 11, 2009

இராமேஸ்வரம்

சுமார் 12 அல்லது 13 ஆண்டுகளுக்கு முன்னால் இக்கோவிலுக்கு சென்றது. நண்பர் திருமணத்திற்கு செல்லும் போக்கில் இக்கோவிலுக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு நினைவு தெரிந்து தான் என்பதாலும், சில படங்களில் பார்த்தது என்பதாலும் எனக்கு ஓரளவு வழி தெரிந்தது. நாங்கள் கோவிலுக்கு சென்ற முன்தினம் தான் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே சென்றோம். ஆனால் அன்று முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் என்பதால் மக்கள் கூட்டம் அனைவரும் அங்கு சென்று விட்டனர். அக்னி தீர்த்தத்தில் (கடல்) நீராடி, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி, 'ராமநாதசுவாமி' பகவானை தரிசித்தோம்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு முன்னால் திருப்புலாணிக்கு சென்றோம். அருமையான கலைநயத்துடன் அமைந்த கோவில். அனந்த சயனத்தில் ராமர் உள்ள ஒரே இடம் என்ற பெருமை இங்கு உண்டு.

தனுஷ் கோடி: இந்தியாவின் தென்மேற்கு முடிவின் பகுதி. இந்தியாவின் தலைப்பகுதிக்கு தான் செல்ல முடியவில்லை என்று நினைத்து, எங்களுடைய சுற்றுலாவில் கடைசியாக இங்கு சென்றோம். செய்தித்தாளில் அடிக்கடி கடல் அரிப்பை பற்றி போடும் போது அறிய ஒன்று, அங்கு சென்று பார்த்த போது தான் எனக்கு தெரிந்தது.

ராமநாதபுரத்தில் இருந்து, ராமேஸ்வரம் செல்வதற்கு இந்திரகாந்தி பாலத்தின் வழியாக சென்றோம். இப்பாலத்தில் இருக்கும் போது வரும் காற்று, எங்கு போனாலும் கிடைக்காது. அதே போல், சென்னைக்கு கிளம்பும் போது ரயிலில் பாம்பன் பாலம் ஏறி வந்தோம். ரயில் செல்லும் அழகு மற்றும் மெல்லிய காற்று ஆகியவற்றை என்னால் எழுதமுடியாது. அதை அனுபவித்தால் தான் தெரியும். கொஞ்சம் முற்பட்டு யோசித்தால், ரயில் செல்லும் போது மட்டும் படகில் காவல் துறையினர் அருகில் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

ராமேஸ்வரம் மற்றும் திருப்புலாணி ஆகிய இடங்களுக்கு சென்று பார்த்தால், ராமர் பாலம் இருந்தது என்ற நம்பிக்கை மேலும் வலுப்படும். நாங்கள் கிளம்பும் வழியில், ராஜஸ்தான் ஜெய்பூர் நகரில் இருந்து வந்த 400 பக்தக் கோடிகள், நாட்களுக்கு முன்னால் வைத்து இங்கேயே தங்கி ராம பிரான் ஜெபத்தை போற்றி எங்களுடன் அவர்களும் சென்னைக்கு கிளம்பினர். தமிழ் நாடு மட்டும் அல்லாமல் இந்திய அளவில் பெயர் உள்ள, இந்து மக்கள் அனைவரும் நம்புகின்ற இந்த வரலாற்று சிறப்பு மிக்க இவ்விடத்தை தமிழக அரசு காக்காமல், கொள்ளை என்ற பெயரில் இதை அழிப்பது மிகவும் பாவ செயல் ஆகும்.

இக்கோவிலை பற்றி சில விஷயங்கள் வலைதளத்தில் இருந்து,

தீர்த்த தலம்: ராமநாதசுவாமி கோயிலுக்குள் 22 தீர்த்தக்கட்டங்களும், வெளியே 31 தீர்த்தங்களும் உள்ளன. பக்தர்கள் பாவ விமோசனம் கிடைக்க இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் (கடல்) நீராடிய பிறகு, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடுவர். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன்பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி புயலில் அழிந்தபிறகு, கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது.

தல வரலாறு : சிவபக்தனான ராவணனை அழித்த தோஷம் நீங்க, ராமபிரான் ரிஷிகளின் ஆலோசனைப்படி சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக லிங்கம் கொண்டு வரச்சென்ற ஆஞ்சநேயர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் லிங்கம் வடித்தாள். ராமர் அந்த லிங்கத்தை பூஜித்தார். இதனால் சுவாமிக்கு, "ராமநாதசுவாமி' என்ற பெயர் உண்டானது. ஆஞ்சநேயர் தாமதமாகக் கொண்டு வந்த "விஸ்வநாதர்' ராமநாதர் சன்னதிக்கு இடப்புறம் உள்ளார். ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்ததால், விஸ்வநாதருக்கு பூஜை செய்தபின்பே, ராமநாதருக்கு பூஜை நடக்கிறது. ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது. ராமர் வழிபட்டதால், இக்கோயிலில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.

புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரம்: ராமநாதசுவாமி கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரம், காண்போர் வியக்கும் வண்ணம் கலையம்சத்துடன் அமைக்கப் பட்டுள்ளது. முத்துராமலிங்க சேதுபதி மன்னர் இப்பிரகாரத்தை 1212 தூண்களுடன், 22 அடி, 7 1/2 அங்குல உயரத்துடன் (1740 - 1770) அமைத்தார். இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. உலக அளவில் பிரசித்தி பெற்ற பிரகாரம் இது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன.

அக்னி தீர்த்தம்: ராமேஸ்வரம் கடல், "அக்னி தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் "அக்னி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்வதுண்டு.

முதலும், முடிவும் இங்கே: காசி- ராமேஸ்வர யாத்திரை செல்பவர்கள் முதலில் இங்கு நீராடி, மணல், தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசிக்குச் சென்று கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்கிறார்கள். மீண்டும் அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்து யாத்திரையை முடிக்கிறார்கள். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். முடியாதவர்கள் கோயிலில் விற்கப்படும் கங்கை தீர்த்தத்தால் ராமநாதருக்கு அபிஷேகம் செய்தும் வழிபடலாம். அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் இது.

ஸ்படிக லிங்க பூஜை : தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது "சேதுபீடம்' ஆகும். இக்கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். வீரத்துறவி விவேகானந்தர் 1897, ஜனவரி 27ல் இங்கு சுவாமியை தரிசித்துள்ளார்.

காலில் சங்கிலியுடன் பெருமாள்: குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார். மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது. இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

பாதாள பைரவர்: ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு "பாதாள பைரவர்' என்று பெயர். இவரது சன்னதி கோடி தீர்த்தம் அருகில் உள்ளது.

தீர்த்தம் பலன்
1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: - எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: - எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

உப்பு லிங்கம்: ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

கோபுரங்களின் மகத்துவம்: கோயில்களின் பிரதான முகப்பில் ராஜகோபுரம் அமைக்கப்படுவது மரபு. சில கோயில்களில் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் அமைத்திருப்பர். கோயிலுக்குள் இருக்கும் இறைவனின் வடிவமே கோபுரம். கோயிலுக்குள் சென்று சுவாமியை தரிசிக்க முடியாதவர்கள், வெளியிலிருந்தே இறைவனை தரிசிக்க வேண்டுமென்பதற்காக முன்னோர்கள் கோபுரங்களையும், கருவறை சன்னதிக்கு மேலே விமானங்களையும் அமைத்தனர். எனவே, கோபுரத்தை வணங்குவது கோயிலுக்குள் இருக்கும் இறைவனை வணங்கிய பலனையே தருகிறது. இதனால்தான் ஆன்மிகப்பெரியோர்கள் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்,
கோபுர தரிசனம் பாவ விமோசனம்' எனச் சொல்லி வைத்தார்கள். இவ்வகையில் கோபுரத்திற்கு செய்யப்படும் கும்பாபிஷேகம், கோயிலுக்குள் அருளும் இறைவனுக்கே செய்விப்பதாகிறது. ராமேஸ்வரத்தில் கிழக்கு மற்றும் மேற்கே ராஜ கோபுரங்கள், அம்பாள் பர்வதவர்த்தினிக்கு சிறிய மங்கள கோபுரம் என 3 கோபுரங்கள் உள்ளன. இது தவிர 11 விமானங்கள் இருக்கின்றன. அக்னி தீர்த்தக்கடலை நோக்கியுள்ள கிழககு கோபுரம் உயரமானது. 9 நிலைகள், 9 கலசங்களுடன், 126 அடி உயரம் கொண்ட இக்கோபுரம் கட்டும் பணியை, 1649ல் ராமநாதபுரம் ராஜா தளவாய் சேதுபதி துவங்கினார். ஆனால், முதல் நிலையுடன் பணி நின்றுவிட்டது. பின்பு தேவகோட்டை சோமநாதன் செட்டியார் குடும்பத்தினர் கோபுரத்தை, 9 நிலைகளுடன் (1897 - 1904) முழுமையாகக் கட்டி முடித்தனர். மேற்கு கோபுரம் 5 நிலைகளுடன் கட்டப்பட்டது. இவ்விரு கோபுரங்களிலும் சுவாமி சிற்பங்கள் அதிகம் வடிக்கப்படவில்லை. மேற்கு கோபுரத்தின் முதல் நிலையில் விநாயகர், முருகன் சிற்பமும், ஐந்தாம் நிலையில் வெங்கடாஜலபதி, சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் ராமர் சிலை மட்டும் உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு திசையில் கோபுரம் கட்ட 2000ம் ஆண்டு, நவம்பர் 13ல் பணி துவங்கியது. ஆனால், அந்தப் பணி பாதியில் நிற்கிறது. அடுத்த கும்பாபிஷேகத்திற்குள் இக்கோபுர பணிகள் நிறைவேறிவிடும் என்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் 1975 மற்றும் 2001 பிப்ரவரி 5ல் முழுமையான கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

திருமண வாழ்த்துக்கள் - பாலதண்டபாணி

எனது பழைய அலுவலக நண்பர் திரு. பாலதண்டபாணி அவர்களுக்கு இம்மாதம் பத்தாம் தேதி திருமணம் ஆனதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

சென்னை ராயபுரத்தில் இவரது திருமணம் நடைபெற்றது. ஐந்து வருடமா இருக்கும் நான் ராயபுரம் செல்வது இது தான் முதல் முறை.

குறிப்பு: யாரும் எதிர் பார்த்திராத ஒரு விஷயம், இத்திருமணம் காதல் மணம்.

கோவில் இல்லா தாம்பரம்

கோவில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்று பழமொழி உண்டு. ஐந்து லட்சம் மக்கள் வாழும் சென்னை தாம்பரத்தில் ஒரு கோவில் இல்லை. என்ன கொடும சார் இது.

மதுரை, திருச்சி, தென்காசி, ராமேஸ்வரம், மற்றும் திருநெல்வேலி போன்ற இடத்தில் தரிசித்து விட்டு.....தாம்பரம் சானிடோரியத்தில் பேருக்கு ஒரு தனியாருக்கு சொந்தமான கோவில் உள்ளது. எதோ மூலவரை பார்த்தல் அட்டையில் செய்து வைத்து இருப்பது போல் ஒரு எண்ணம். இப்படி இருக்க அங்கு போய் எப்படி கடவுளை தரிசிக்க மனம் வரும்.

ஆச்சிரியம் ஆனால் உண்மை

மதுரையில் திருட்டு டி.வி.டி கிடைக்க மாட்டேங்குதேங்க.. என்னத்த சொல்ல

பணம் தின்னும் மிருகங்கள்

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொண்ணுசாமி உணவகம் செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் போடும் நிலையத்தில், ரூ.100க்கு கேட்டால் ரூ.40க்கு மதிப்பான பெட்ரோல் மட்டுமே தந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

துபாயில் உள்ள தண்டனை போல் இங்கு இருந்தால், இப்படி மக்களை ஏமாற்றி பணம் தின்னும் மிருகங்களை நடு வீதியில் வைத்து கல்லடித்து கொல்ல வேண்டும் போல் அன்று என் மனம் இருந்தது,

எல்லாம் தெரிந்த அரசாங்கம் கண்களை மூடி கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

திருமண வாழ்த்துக்கள் - பரத்

இம்மாதம் இரண்டாம் தேதி எனது தற்போது அலுவலக நண்பர் திரு. பரத் அவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றது. இதற்கு என்னுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...இதே தினத்தில் மற்றொரு திருமணத்திருக்கு செல்ல வேண்டி இருந்ததால் சென்னையில் நடந்த இத்திருமணத்திற்கு செல்ல முடியவில்லை

திருமண வாழ்த்துக்கள் - ராதா கிருஷ்ணன்

எனது பழைய அலுவலக நண்பர் திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு இம்மாதம் இரண்டாம் தேதி திருமணம் ஆனதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

திருமணம் திருசெந்தூருக்கும், ராமநாதபுரத்துக்கும் இடையே உள்ள சாயல்குடியில் நடைபெற்றது. மண்டபம் உள்ள சாலை முழுவதும் பத்து அடிக்கு ஒரு பெரிய பலகையில் உள்ளூர் அரசியல் தலைவருடன் மணமக்கள் புகைப்படம் (கிராமத்து திருமணம் என்பதை தெரிவிக்கும் வகையில் இருந்ததால், எங்களுக்கு அரிதாக பட்டது).

எனக்கு தெரிந்தவரை கல்யாண வீட்டில் நாதஸ்வரம் தான் முழங்கும். ஆனால் இங்கு வெளியில் வாசிக்கும் பேன்டு வாத்தியம் மண்டபத்தில் இருந்ததால், நாதஸ்வர மேளம் எதுவும் கேட்கவில்லை. ஐயர் இல்லாமல், குடும்பத்தில் மற்றும் ஊரில் பெரியோர் சிலவற்றை வாசிக்க திருமணம் நடைப்பெற்றது. மதுரையில் நான் இம்மாதிரியான கல்யாணத்தை பார்த்து இருந்ததால் எனக்கு புதிதாக தெரியவில்லை. ஆனால் என்னுடன் இருந்த சென்னை மக்களுக்கு ஆச்சிரியமாக இருந்தது.

சென்னையில் இருந்து சாயல்குடி வரை வந்து செல்வதற்கு மற்றும் அங்கு தங்குவதற்கு சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்த நண்பர் ராதா அவர்களுக்கு நன்றி.